ஒரே நாளில் வாய்ப்பில்லை... உக்ரைன் விவகாரத்தில் ட்ரம்பின் அடுத்த நடவடிக்கை
உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை விரைவில் சந்திக்க விரும்புவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முடிவுக்கு கொண்டுவருவேன்
அமெரிக்க தேர்தல் பரப்புரையின் போது டொனால்டு ட்ரம்ப் பலமுறை உக்ரைன் போர் தொடர்பில் தமது கருத்தை பதிவு செய்து வந்தார். ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்ததன் 24 மணி நேரத்தில் உக்ரைன் போரினை முடிவுக்கு கொண்டுவருவேன் என்றும் ட்ரம்ப் வெளிப்படையாக பேசியிருந்தார்.
ஆனால், அவரது ஆலோசகர்கள் தற்போது போர் முடிவுக்கு கொண்டுவர பல மாதங்கள் ஆகும் என்று ஒப்புக்கொள்கிறார்கள். இந்த நிலையில், திங்கட்கிழமை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ட்ரம்ப், டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் காணொளி இணைப்பு மூலம் உரையாற்றினார்.
அதில், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக விரைவில் ஜனாதிபதி புடினைச் சந்திக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். அது பொருளாதாரம் சார்ந்தது அல்ல. மில்லியன் கணக்கான உயிர்கள் வீணடிக்கப்படுவதைப் பற்றிய கவலை.
அதிக அளவிலான தடைகள்
இது ஒரு படுகொலை. நாம் உண்மையில் அந்தப் போரை நிறுத்த வேண்டும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமக்கு கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் புடினும் தம்மை சந்திக்க விரும்புகிறார். மிக விரைவில் இது நடக்கும் என்றார்.
மட்டுமின்றி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் செய்யத் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தன்னிடம் கூறியதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த வார தொடக்கத்தில், உக்ரைன் விவகாரத்தில் ஒரு தீர்வை எட்டவில்லை என்றால், ரஷ்யா மீது அதிக அளவிலான தடைகள் மற்றும் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிகளை விதிக்கப் போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |