போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவளிக்கத் தயார்... ஐரோப்பிய தலைவர்கள்
போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்காக, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்மொழிவை ஆதரிப்பதாக ஐரோப்பிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அழைப்பை பாராட்டினர்
இதில் ஐரோப்பா முக்கிய பங்காற்றும் என்றும் பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் கெய்ர் ஸ்டார்மர், ஜேர்மன் சேன்ஸலர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில்,
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் தீவிர பங்கேற்புடன் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும், போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் ஜெலன்ஸ்கி விடுத்த அழைப்பை பாராட்டினர்.
உக்ரைனின் முக்கிய சர்வதேச ஆதரவாளர்களான 'E3' எனப்படும் முறைசாரா பாதுகாப்புக்கூட்டணியைக் கொண்ட தலைவர்களுடன், பிரித்தானியாவின் பிரதமர் அளுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று ஜெலென்ஸ்கி இணைந்தார்; புடினுக்கு ஒரு திறந்த கடிதத்தை உக்ரைனியத் தலைவர் வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.
ஐந்தாவது ஆண்டாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து புடினிடம் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தார்; ஆனால், ரஷ்ய ஜனாதிபதி அதனை நிராகரித்துவிட்டார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், ரஷ்ய ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, இராஜதந்திர வழிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி விடுத்த அழைப்பைத் தலைவர்கள் பாராட்டினர்.
சட்டப்பூர்வமான பாதுகாப்பு
ஆனால் ஜெலென்ஸ்கியின் அந்த முன்னெடுப்பு உண்மையானதாகத் தோன்றவில்லை என்றும், தற்போது சந்திப்பதில் எந்தப் பயனும் இல்லை என்றும் கூறிய புடின், நீண்ட கால அடிப்படையில் ஒரு ஒப்பந்தம் தேவை என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், நியாயமான மற்றும் நீடித்த அமைதியை நிலைநாட்டத் தேவைப்படும் நிபந்தனைகளை ஐரோப்பியத் தலைவர்களும் ஜெலன்ஸ்கியும் வகுத்துள்ளனர்.
பேச்சுவார்த்தைகளுக்குத் தற்போதைய கட்டுப்பாட்டுக் கோடே தொடக்கப் புள்ளியாக அமைய வேண்டும் என்றும், பன்னாட்டுப் படை ஒன்றை நிலைநிறுத்துவது உள்ளிட்ட சட்டப்பூர்வமான பாதுகாப்பு உத்தரவாதங்கள் உக்ரைனுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு ரஷ்யா உக்ரைனுக்கு இழப்பீடு வழங்கும் வரை ரஷ்யாவின் சொத்துகள் முடக்கப்பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும் என்றும் கூறினர்.
இறுதியாக, ஐரோப்பாவின் பாதுகாப்பு நலன்கள் எவையாயினும் அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அந்த நான்கு தலைவர்களும் கூறினர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |