இது நடந்தால் திமுகவுக்கு ஆதரவு தர தயார்- சீமான் முடிவு
தமிழகத்திற்கு, காவிரியில் இருந்து தண்ணீர் தர மறுக்கும் காங்கிரசை கூட்டணியில் இருந்து வெளியேற்றினால் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
கோடநாடு விவகாரம்
நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமான்,"கோடநாடு விவகாரத்தில் கார் ஓட்டுனரின் அண்ணன் கூறிய பதில் காலதாமதமாக இருந்தாலும் வரவேற்கதக்கது தான். அவரை விசாரித்த பொலிசார் அனைவரும் அவரை மிரட்டியதாக கூறியுள்ளார்.
எனவே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் கூறும் கருத்தை வைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
நீட் விவகாரம்
மேலும் பேசிய சீமான்,"மத்தியில் காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த திமுக, நீட் மற்றும் கச்சத்தீவு விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நீட் தேர்வை கொண்டுவந்தது இந்தியா கூட்டணி தான். நீட் தேர்வு வேண்டும் என்று வாதிட்டவர் நளினி சிதம்பரம். அப்படி உள்ள நிலையில் காங்கிரசை ஏன் கூட்டணியில் வைத்துள்ளீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
திமுகவுக்கு ஆதரவு
தொடர்ந்து அவர்,"தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் தர மறுக்கும் காங்கிரசை கூட்டணியில் இருந்து வெளியேற்றினால் வரும் மக்களவை தேர்தலில் நாங்கள் போட்டியில் இருந்து விலகிக் கொண்டு திமுகவுக்கு ஆதரவு அளிக்க தயார்" என்று கூறினார்.
அதுமட்டுமல்லாமல்,"நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து என்னுடன் கூட்டணி வைக்க விருப்பப்பட்டால் இணைந்து செயல்படுவேன். நடிகர் ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது அவரது சொந்த விருப்பம்" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |