இந்தியா மீதான ட்ரம்பின் கடும் கோபத்திற்கு உண்மையான காரணம்... ரஷ்ய எண்ணெய் இறக்குமதி அல்ல
இந்திய இறக்குமதிகள் மீதான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 50 சதவீத வரியை அடுத்து, கடந்த மூன்று தசாப்தங்களாக பேணி வந்த இந்தியா-அமெரிக்க உறவுகள் மிக மோசமான நிலைக்குச் சரிவடைந்துள்ளது.
தனிப்பட்ட கருத்து வேறுபாடு
ஜனாதிபதி ட்ரம்ப்பின் வழக்கமான இந்த அழுத்தம், தங்களுக்கு சாதகமாக பிற நாடுகளை ஒப்பந்தத்தில் கட்டாயப்படுத்துவதற்காக என கூறப்படும் நிலையில் தற்போதைய இந்த வரி வேட்டைக்குப் பின்னால் உள்ள காரணம் உண்மையில் வேறு என்றே நிபுணர்கள் நம்புகின்றனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான தனிப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே ட்ரம்ப் இந்தியா மீது கோபமாக இருக்கிறார் என கூறுகின்றனர். இந்தியா மீதான ட்ரம்பின் வெறுப்புக்கான மூல காரணம், குறிப்பாக பிரதமர் மோடி மீதான அவரது கோபம், ஜூன் 17 அன்று நடந்த 35 நிமிட தொலைபேசி உரையாடலில் இருந்து துவங்குவதாக கூறுகின்றனர்.
இந்த ஆண்டு மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததாக மீண்டும் மீண்டும் கூறியதற்காக அமெரிக்க ஜனாதிபதியிடம் இந்தியப் பிரதமர் உரிய விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜூன் 17 அன்று நடந்த தொலைபேசி உரையாடலின் போது, மோடி ட்ரம்பின் மத்தியஸ்த வாதத்தை கடுமையாக சாடியுள்ளார், மேலும் இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் எந்த மூன்றாம் தரப்பினரின் தலையீடும் இல்லாமல் இருதரப்பு ரீதியாக எட்டப்பட்டதாகக் கூறியுள்ளார்.
வெளியான தகவலின் அடிப்படையில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீருடன் ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகை மதிய உணவு விருந்து நிலைமையை மோசமாக்கியது, மேலும் ஓவல் அலுவலகத்தில் முனீரை அமெரிக்கா வரவேற்றது குறித்த தனது நிலைப்பாட்டையும் மோடி தெளிவுபடுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் பாகிஸ்தான் அரசாங்கத் தலைவர்களைச் சந்திப்பதில் இந்திய அரசாங்கத்திற்கும் அதன் தலைமைக்கும் சிக்கல் இல்லை என்றும், ஆனால் பாகிஸ்தான் இராணுவத் தளபதியை வெள்ளை மாளிகையில் வரவேற்பதற்கு ஆட்சேபனை தெரிவித்ததாகவும் பிரதமர் மோடி டொனால்ட் ட்ரம்பிடம் கூறியதாக கூறப்படுகிறது.
தனிப்பட்ட பழிவாங்கல்
இந்த நிலையில், மோடி உச்சிமாநாட்டிற்காக கனடாவில் இருந்தபோது, ட்ரம்ப் அவரை இந்தியா திரும்பும் வழியில் அமெரிக்காவிற்குச் சென்று வெள்ளை மாளிகையில் தங்குமாறு கேட்டுக் கொண்டார், ஆனால் இந்தியப் பிரதமர் அந்த அழைப்பை நிராகரித்தார்.
மட்டுமின்றி, தனக்கும் அசிம் முனீருக்கும் இடையே ஒரு கட்டாய சந்திப்பை ஏற்பாடு செய்ய ட்ரம்ப் சதி செய்கிறார் என்று மோடி அச்சமடைந்ததால் ட்ரம்பின் அழைப்பை அவர் நிராகரித்ததாக தகவல் கசிந்தது.
இந்த நிகழ்வுகள் டிரம்பின் ஈகோவைப் புண்படுத்தின, இதன் விளைவாக அவர் இந்தியாவிற்கும் மோடிக்கும் எதிரான தனிப்பட்ட பழிவாங்கலைத் தீர்ப்பதற்கான ஒரு வழியாக வரிகளை ஆயுதமாகக் கொண்டார் என நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த புதன்கிழமை மேலும் 25 சதவீத வரி விதித்து மொத்தம் 50 சதவீதமாக அதிகரித்த நிலையில், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் ஆயுதங்களை வாங்கியதற்கான தண்டனை இதுவென அமெரிக்க ஜனாதிபதி விளக்கமளித்தார்.
அத்துடன், உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியா நிதியுதவி அளித்து வருவதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |