9 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்.., எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் நாளை (அக்.16) ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.
நாளை ரெட் அலர்ட்
தமிழகத்தில் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வினை மேற்கொண்டார். இதையடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. 16 மற்றும் 17 -ம் திகதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (ஒக்.15), ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவக்கூடும்.
பின்னர், அடுத்த 2 நாட்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதனால், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் உள்ள சில இடங்களில் இன்று (ஒக் -15) கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
அதேபோல இன்று, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் நாளை (ஒக் - 16) பெய்யக்கூடும். இதனால், மேற்சொன்ன 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர்,பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல்மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |