வேலை நேரத்தை குறைக்க போராட்டத்தில் குதித்த ஐரோப்பிய நாடொன்றின் தொழிற்சங்கங்கள்
ஸ்பெயினில் வேலை நேரத்தைக் குறைப்பது தொடர்பாக அரசாங்கத்திற்கும் நிறுவனங்களுக்கும் இடையே ஒரு உடன்பாட்டைக் கட்டாயப்படுத்தும் முயற்சியில் தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தன.
குறைந்த வேலை நேரத்தில்
வியாழக்கிழமை நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தின் போது, ஸ்பெயினின் தற்போதைய பொருளாதாரமும் நிறுவனங்களும் வேலை நேரத்தில் பொதுவான குறைப்பை முன்னெடுக்கலாம் என CCCO தொழிற்சங்கத்தின் தலைவர் Unai Sordo தெரிவித்துள்ளார்.
மேலும், நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பமும் பணியாற்றும் முறையும், இதே ஊதியத்தில் குறைந்த வேலை நேரத்தில் உற்பத்தித்திறனையும் மேம்படுத்த முடியும் என்றார்.
இதனிடையே, பிரதமர் Pedro Sanchez மற்றும் அவரது கூட்டணி கட்சியினர் இணைந்து 40 மணி நேர வேலை நேரத்தில் இருந்து 2.5 மணி நேரம் குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க தொழில் நிறுவனங்களுடன் கலந்தாய்வில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, தொழில் நிறுவனங்களின் ஆதரவை தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு 10க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட சிறு வணிகங்களுக்கு வேலை நேரக் குறைப்பை ஈடுகட்ட, அதே அளவிலான சேவையைப் பேணுவதற்கு அரசாங்கம் பணியமர்த்தல் போனஸை வழங்க முன்வந்துள்ளது.
இதனிடையே, 2024 இறுதிக்குள் வேலை நேரம் குறைப்பு என்பது ஸ்பெயின் அரசாங்கத்தால் அமுலுக்கு கொண்டுவரப்படும் என்றே மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வேலை வாய்ப்பை உருவாக்கலாம்
ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயின் மக்களே அதிக நேரம் வேலை பார்க்கின்றனர். வாரத்திற்கு சராசரியாக 36.4 மணி நேரம் வேலை பார்க்கின்றனர். ஆனால் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளிலும் சராசரியாக 36.1 மணி நேரம் வேலை பார்க்கின்றனர்.
இதனிடையே, அதே ஊதியத்தில் குறைவான மணி நேரம் ஊழியர்கள் வேலை பார்க்க இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்ற அச்சத்தில் ஸ்பெயின் தொழில் நிறுவன உரிமையாளர்கள் உள்ளனர்.
வேலை நேரத்தை குறைப்பதால் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்பை உருவாக்கலாம் என்ற நம்பிக்கையில் கடந்த 2000 ஆண்டு பிரான்ஸ் நிர்வாகம் ஊழியர்களின் வேலை நேரத்தை வாரத்திற்கு 35 மணி நேரமாக குறைத்தது.
ஆனால் தொழிலாளர்களுக்கான செலவு அதிகரித்ததுடன், நிறுவனங்கள் போட்டித்தன்மை இல்லாத சூழலும் உருவானதாகவே ஆய்வில் தெரிய வந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |