நான்கு ஆண்டுகளுக்கு முன் நாட்டையே உலுக்கிய சிறுமி கொலை வழக்கு... வெளியான புதிய தகவல்
பிரான்சில், நான்கு ஆண்டுகளுக்கு முன் சிறுமி ஒருத்தியின் கொலை வழக்கு நாட்டையே உலுக்கிய நிலையில், அந்த சிறுமியைக் கொன்ற அதே நபர் தன் சக வீரரையும் கொன்றதாக, இரண்டாவது முறையாக அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Nordahl Lelandais (38) என்ற முன்னாள் பிரெஞ்சு இராணுவ வீரர், 2017ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் Maelys de Araujo என்ற எட்டு வயது சிறுமியை கொலை செய்தார். அந்த சம்பவம் பிரான்சில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அடுத்த ஆண்டு அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், 2017ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி அதிகாலையில், தனது வண்டியில் லிப்ட் கேட்டு ஏறிய Corporal Arthur Noyer (23) என்ற தனது சக இராணுவ வீரரையும் கொலை செய்ததாக Nordahl ஒப்புக்கொண்டுள்ளார்.
அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கவேண்டும் என அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்ட நிலையில், நீதிமன்றம் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இரண்டு சம்பவங்களுமே தற்செயலாக நடந்தவை என Nordahl கூறியுள்ள நிலையில், Noyer தன்னை அடித்ததாகவும், அதனால் தான் திருப்பித் தாக்கும்போது அவர் இறந்துபோனதாகவும் தெரிவித்திருந்தார்.
இன்னொரு பக்கம், திருமணம் ஒன்றிற்கு சென்றிருந்த சிறுமி Maelysஐ பொலிசார் பல மாதங்களாக தேடிவந்த நிலையில், 2018ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், அதே திருமணத்துக்கு வந்திருந்த Nordahlஇன் காரில் Maelysஇன் இரத்தம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் சிக்கினார்.
ஒன்றன் பின் ஒன்றாக இந்த இரண்டு கொலைகளையும் Nordahl செய்தது தெரியவந்துள்ளதையடுத்து, அதே பகுதியில் காணாமல் போன பலரது வழக்குகளுக்கும் பின்னால் Nordahlதான் இருப்பாரோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, அதிகாரிகள், அந்த வழக்குகளையும் மீண்டும் தூசி தட்டி எடுத்து விசாரிக்கத் துவங்கியுள்ளார்கள்.