ரூ 50,000 கோடி சொத்து... 24 நாடுகளில் நிறுவனங்கள்: கணவர் முன்னாள் டாக்ஸி சாரதி
கடந்த பத்தாண்டுகளில் இந்தியா பில்லியனர்களின் மையமாக மாறியுள்ளது, பெண்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
3வது இடத்தில்
பெரும்பாலான பெண்கள் குடும்ப சொத்தில் இருந்து தங்களுக்கானப் பங்கைப் பெற்றிருக்கிறார்கள் அல்லது சிலர் அரச குடும்பத்தின் வாரிசுகளாக இருக்கிறார்கள். ஆனால், ரேணுகா ஜக்தியானியும் அவரது கணவர் லண்டனில் ஒரு காலத்தில் டாக்ஸி சாரதியாகப் பணிபுரிந்த மிக்கி ஜக்தியானியும் ஒன்றாக இணைந்து தங்கள் செல்வத்தை ஈட்டினர்.
மறைந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோடீஸ்வரர் மிக்கி ஜக்தியானியின் மனைவி ரேணுகா ஜக்தியானி, லேண்ட்மார்க் குழுமத்தின் தலைவராக உள்ளார். உலகமெங்கும் 24 நாடுகளில் இவர்களது நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
தற்போது 71 வயதாகும் ரேணுகா, இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரப் பெண்களில் 3வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 5.6 பில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது. சாவித்ரி ஜிண்டால் மற்றும் ரேகா ஜுன்ஜுன்வாலாவுக்குப் பிறகு இந்தியாவின் மூன்றாவது பணக்காரப் பெண் ரேணுகா ஜக்தியானி.
கடந்த ஓராண்டில் மட்டும் 1 பில்லியன் டொலர் அளவுக்கு அவர் சம்பாதித்துள்ளார். 1973ல் மிக்கி ஜக்தானியால் பஹரினில் தொடங்கப்பட்ட லேண்ட்மார்க் குழுமத்தின் தற்போதைய தலைவராக ரேணுகா செயல்பட்டு வருகிறார்.
மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, இந்தியா உட்பட மொத்தம் 24 நாடுகளில் 2,200க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. 1999 ஆம் ஆண்டு இந்தியாவில் தனது வணிகத்தைத் தொடங்கிய லேண்ட்மார்க் குழுமம், நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்டுள்ளது,
டாக்ஸி சாரதி
1970 களின் முற்பகுதியில் மிக்கி ஜக்தியானி லண்டன் தெருக்களில் டாக்ஸி சாரதியாக பணியாற்றியுள்ளார். மிக்கியின் பெற்றோர் 1950களில் குவைத்துக்கு குடிபெயர்ந்தனர். மிக்கி லண்டனில் உள்ள கணக்கியல் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு சென்னை, மும்பை மற்றும் பெய்ரூட்டில் பள்ளிப் படிப்பைப் பயின்றார்.
இருப்பினும், சூழ்நிலை அவரை படிப்பை கைவிட வைத்து, ஹொட்டலில் துப்புரவு பணியாளராகவும், டாக்ஸி சாரதியாகவும் வேலை செய்ய கட்டாயப்படுத்தியது. தனது பெற்றோர் மற்றும் மூத்த சகோதரர் காலமான பிறகு, மிக்கி தனது 6,000 டொலர் சேமிப்பை கடையில் முதலீடு செய்ய முடிவு செய்தார்.
லேண்ட்மார்க் என பெயர் மாற்றம் செய்து, சுமார் 10 ஆண்டுகள் வணிகம் பார்த்த பிறகு பஹ்ரைனில் ஆறு புதிய கடைகளைத் திறந்தார், ஆனால் அவரும் ரேணுகாவும் வளைகுடாப் போரின் போது துபாய்க்குச் சென்று, அங்கு லேண்ட்மார்க் குழுமத்தை நிறுவினர். தற்போது இவர்களின் நிறுவனத்தில் 45,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |