பொலிஸ் என்கவுண்டரில் 6,000 பேர் கொலை: சிக்கலில் முன்னாள் ஜனாதிபதி
பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ காலத்தில் நடந்த கொலைகள் மற்றும் பிற சந்தேகத்திற்குரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) சட்டத்தரணி மீண்டும் தொடங்க முயற்சிப்பதாகக் கூறியுள்ளார்.
ஜூன் 2021ல் வெளியிடப்பட்ட பிலிப்பைன்ஸ் அரசாங்கத் தரவுகளின்படி, ஏப்ரல் 2021 நிலவரப்படி குறைந்தது 6,117 போதைப்பொருள் வியாபாரிகள் பொலிஸ் என்கவுன்டர்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்த எண்ணிக்கை 30,000 ஆக இருக்கலாம் என்று மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் போதைப்பொருளுக்கு எதிரான போர் மீதான விசாரணையை சர்வதேச நீதிமன்றம் நவம்பரில் நிறுத்தி வைத்தது.
இந்த நிலையில், அரசாங்கம் அளித்துள்ள தரவுகள், பொதுவெளியில் திரட்டப்பட்ட தகவல்கள் என அனைத்தையும் ஆய்வுக்கு உடுபடுத்தியுள்ளதாகவும், பிலிப்பைன்ஸால் கோரப்பட்ட ஒத்திவைப்புக்கு உத்தரவாதம் இல்லை என்றும்,
முடிந்தவரை விரைவாக விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் நான் முடிவு செய்துள்ளேன் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டத்தரணி கரீம் கான் வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பில் பிலிப்பைன்ஸ் நிர்வாகத்திடம் உரிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2016ம் ஆண்டு பிலிப்பைன்ஸில் குற்றங்களை எதிர்த்துப் போராடுவது என்ற ஒற்றைப் பிரச்சினையில் டுடெர்டே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார்.
இதனையடுத்து ஆட்சியை கைப்பற்றிய அவர், போதை மருந்து கும்பல்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கையை அறிவித்தார். நாட்டின் கத்தோலிக்க தலைவர்களால் இது பயங்கரவாத ஆட்சி என்று வர்ணிக்கப்பட்டது.
மேலும், 2018ல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகள் பட்டியலில் இருந்து வெளியேறிய பிலிப்பைன்ஸ், இந்த விவகாரத்தில் எந்த ஒத்துழைப்பும் அளிக்க முடியாது எனவும் அறிவித்தது.
தற்போது ஆட்சியை இழந்துள்ள ரோட்ரிகோ விசாரணையை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்றே தெரியவந்துள்ளது.