மீண்டும் இதை செய்தால் தமிழகம் போர்க்களமாக மாறும்! சீமான் எச்சரிக்கை
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும், சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்து நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில், ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் ஆலையை திறக்கலாம் என பல தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கொரோனா பேரிடர் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும், சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி நிலத்தையும், சூழலியலையும் பாழ்படுத்தி, சுவாசிக்கும் காற்றையே நச்சுக்காற்றாக மாற்றியதோடு மட்டுமல்லாது 14 உயிர்களின் மூச்சுக்காற்றையும் நிறுத்தக் காரணமாக இருந்த ஸ்டெர்லைட் ஆலையானது, மக்களின் உயிர்காக்க சுவாசக்காற்றை உற்பத்தி செய்து தருவதாகக் கூறுவது கேலிக்கூத்தானது.
மத்திய அரசின் கையாலாகத்தனத்தாலும், மக்கள் நலன் குறித்த அக்கறையின்மையினாலும் நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைக் காரணமாகக் கொண்டு மீண்டும் இயங்குவதற்கு அடித்தளமிடும் ஸ்டெர்லைட் ஆலையின் முயற்சிகளை மொத்தமாய் முறியடிக்க வேண்டும்.
மக்களின் உயிருக்கும், மண்ணின் நலத்துக்கும் முற்று முழுதாகத் தீங்கு விளைவிக்கிற, நச்சு ஆலை என்று உயர் நீதிமன்றத்தாலேயே குறிப்பிடப்பட்ட, சூழலியல் கேடுகளுக்காக 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட கொடிய ஸ்டெர்லைட் ஆலையை எதன்பொருட்டும் மீண்டும் திறக்க அனுமதிக்கக்கூடாது.
கொரோனா பேரிடர் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும்; சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும்!https://t.co/9JrQcd5NCT pic.twitter.com/d0VxEppilp
— சீமான் (@SeemanOfficial) April 26, 2021
இதற்கு மாறாக, தற்காலச் சூழலைக் காரணமாகக் காட்டி, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சிகள் நடக்குமேயானால் தமிழகம் மீண்டும் போர்க்களமாக மாறும்; தேவையற்றப் பதற்றமும், சட்டம் ஒழுங்குச் சிக்கலும் ஏற்படுமென எச்சரிக்கிறேன் என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.