ஒரு வழியாக... சுமார் 100 பெண்கள் மற்றும் குழந்தைகள் மரியூபோல் உருக்காலையிலிருந்து மீட்பு: ஆனால்...
ஒரு வழியாக உக்ரைனின் மரியூபோல் நகரில் அமைந்துள்ள உருக்காலையில் தஞ்சம் புகுந்திருந்த உக்ரைனியர்களை வெளியேற்றும் பணி துவங்கியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மரியூபோல் நகரிலுள்ள Azovstal உருக்காலை ரஷ்யப் படையினரால் ஏப்ரல் 16ஆம் திகதி முற்றுகையிடப்பட்டது. ஆனாலும், உண்மையில் இரண்டு மாதங்களாகவே சுமார் 2,000 பேர் அங்கு தஞ்சம் புகுந்துள்ளார்கள்.
அவர்களில் சுமார் 1,000 பேர் பொதுமக்கள் என்றும், மீதமுள்ளவர்கள் உக்ரைன் இராணுவ வீரர்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் அமைப்பும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும், உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகளுடைய ஒத்துழைப்புடன் இந்த மீட்புப் பணியைத் துவக்கியுள்ளன.
மிக நீண்ட பேச்சுவார்த்தைகள், முயற்சிகள், சந்திப்புகள், தொலைபேசி அழைப்புகளுக்குப் பிறகு, முதல் கட்டமாக, பெண்களும் குழந்தைகளுமாக சுமார் 100 பேர் அந்த உருக்காலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஆனால், பிரச்சினை என்னவென்றால், மீட்கப்பட்டுள்ளவர்கள் ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனிலுள்ள Bezimenne என்னும் கிராமத்துக்குத்தான் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
அங்கு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அவர்கள், பிறகு எங்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஆக, அவர்கள் ரஷ்ய தொழிலாளர் முகாம்களைச் சென்றடையும் ஒரு பரிதாப நிலைஉருவாகிவிடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளதையும் மறுப்பதற்கில்லை.