சாகசமாக காப்பாற்றப்பட்ட சிரிய கைதி: பின்னணி அறிந்து அதிர்ச்சியில் உறைந்த உலகம்
சிரியாவில் சர்வதேச செய்தி ஊடகக் குழுவினரால் சாகசமாக காப்பாற்றப்பட்ட கைதி, உண்மையில் அசாதின் இரக்கமற்ற அதிகாரிகளில் ஒருவர் என்பது அம்பலமாகியுள்ளது.
விசாரிக்கும் நடவடிக்கை
தொடர்புடைய சர்வதேச செய்தி ஊடகக் குழுவினரால் வெளியிடப்பட்ட அந்த புகைப்படம் மற்றும் காணொளியானது உலகம் முழுக்க கவனம் பெற்றது. ஹோம்ஸ் பகுதியை சேர்ந்த Adel Gharbal என தம்மை அறிமுகம் செய்த அந்த நபர் குறித்த பின்னணி தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அந்த நபரின் பின்னணியை விசாரிக்கும் நடவடிக்கையில் அந்த சர்வதேச செய்தி ஊடகம் களமிறங்கியுள்ளது. இந்த நிலையில், அந்த நபரின் உண்மையான பெயர் Salama Mohammad Salama எனவும் Adel Gharbal அல்ல எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிரியாவின் விமானப்படை புலனாய்வு இயக்குநரகத்தின் சோதனைச் சாவடிகளை நடத்துபவராகவே உள்ளூர் மக்களால் அவர் அறியப்பட்டுள்ளார். மட்டுமின்றி, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் துன்புறுத்தலுக்குப் பெயர் பெற்றவர் என்றும் உள்ளூர் மக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இராணுவ உடையில் அரசு அலுவலகம் ஒன்றில் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியானதுடன், முகத்தை அடையாளம் காணும் மென்பொருள் மூலம் நடத்தப்பட்ட சோதனையில், அந்த நபரின் பின்னணி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அனுதாபத்தைப் பெற
இந்த நபரால் உள்ளூர் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதும், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது. ஆனால் டமாஸ்கஸ் சிறையில் அவர் அடைக்கப்பட்டதன் பின்னணி உறுதி செய்யப்படவில்லை.
மூத்த அதிகாரி ஒருவருடன் ஏற்பட்ட பணம் தொடர்பான கருத்து மோதல் காரணமாக சில வாரங்களுக்கு முன்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என உள்ளூர் மக்கள் தெரிவிக்க, கடந்த மூன்று மாதங்களாக தாம் சிறையில் இருப்பதாக சலாமா தெரிவித்துள்ளார்.
உண்மையில் அசாத் ஆட்சி கவிழ்ந்ததும், அவரது உயிரைப் பாதுகாக்க அனுதாபத்தைப் பெற முயற்சிக்கிறார் என்றே கூறப்படுகிறது. அத்துடன், அசாத் அரசாங்கத்துடன் தொடர்பான அனைத்து சமூக ஊடக பதிவுகளையும் சலாமா நீக்கியுள்ளதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |