தரைமட்டமான கட்டிட இடிபாடுகளுக்குள்ளிருந்து கேட்ட பெண்ணின் குரல்... பின்னர் நிகழ்ந்த சோகம்
அமெரிக்காவின் மியாமியில் 12 மாடிக் கட்டிடம் திடீரென நிலை குலைந்து சரிந்ததில், கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த ஒரு பெண்ணின் குரலைக் கேட்ட மீட்புக் குழுவினர், அவரை தாங்கள் எப்படியும் மீட்டுவிடுவோம் என அவருக்கு உறுதியளித்துள்ளனர்.
அந்த கட்டிடம் இடிந்து 10 மணி நேரத்துக்குப் பின் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. காப்பாற்றுங்கள், உதவி என சத்தமிட்ட அந்த பெண்ணுக்கு பதிலளித்த மீட்புக் குழுவினர், அவரிடம் பேச்சுக் கொடுக்க, தானும் தனது வயது முதிர்ந்த பெற்றோரும் அந்த இடத்தில் சிக்கியிருப்பதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
பயப்படாதீர்கள், நாங்கள் எப்படியும் உங்களை மீட்டு விடுவோம் என அந்த பெண்ணுக்கு உறுதியளித்த மீட்புக் குழுவினர், அவரை மீட்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியபோது, திடீரென அந்த இடம் தீப்பற்றியுள்ளது.
பின்வாங்கிய மீட்புக்குழுவினர் மீண்டும் அந்த பெண்ணை அழைத்தபோது, அங்கிருந்து எந்த சத்தமும் வரவில்லை. அவ்வளவுதான், அவர் மயங்கிவிட்டார் போலும். அதற்குப் பிறகு அவரை மீட்க முடியவில்லை.
அத்துடன், மீட்புப் பணிக்காக இடிபாடுகளை உடைக்கும்போது, மேலும் கட்டிடம் இடிந்து விழலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் மீட்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டுவிட்டது. அந்த கோர சம்பவத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 145பேரைக் காணவில்லை!