தவறு செய்துவிட்டேன், ராஜினாமா செய்கிறேன்: பிரித்தானிய உள்துறைச் செயலர் பதவி விலக இதுதான் காரணமாம்
லிஸ் ட்ரஸ் அமைச்சரவைக்கு மேலும் ஒரு பெரிய அடி விழுந்துள்ளது.
நிதி அமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உள்துறைச் செய்லரும் ராஜினாமா செய்துள்ளார்.
பிரித்தானிய உள்துறைச் செயலராக இருந்த பிரீத்தி பட்டேல் பதவி விலகியதைத் தொடர்ந்து அந்த பதவிக்கு வந்த சுவெல்லா பிரேவர்மேனும் தற்போது பதவி விலகியுள்ளார்.
பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு அவர் எழுதியுள்ள ராஜினாமா கடிதம், அவர் ராஜினாமா செய்ததன் காரணத்தை விளக்குவதுடன், தற்போதைய ஆட்சியையும் மறைமுகமாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவெல்லா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தான் புலம்பெயர்தல் தொடர்பான ஒரு அதிகாரப்பூர்வ ஆவணத்தை தனது தனிப்பட்ட மின்னஞ்சலிலிருந்து தனது நாடாளுமன்ற சக உறுப்பினர் ஒருவருக்கு அனுப்பியதாகவும், பின்னர் தான் செய்தது தவறு என தான் உணர்ந்ததால், தான் செய்த தவறுக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், அவரது வார்த்தைகள், லிஸ் ட்ரஸ் அரசையும் மறைமுகமாக விமர்சித்துள்ளன. தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்பவர்களை நம்பித்தான் அரசு இயந்திரம் இயங்குகிறது. நாம் தவறே செய்யவில்லை என்பதுபோல நடித்துக்கொண்டு, எல்லாம் தானே சரியாகிவிடும் என நம்புவது சீரியசான அரசியல் அல்ல.
நான் தவறு செய்துவிட்டேன், அதற்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன், நான் ராஜினாமா செய்கிறேன் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் சுவெல்லா.
PA MEDIA