டெட் தேர்வில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு - தனித்தீர்மானம் நிறைவேற்றம்
resolution for exemption from tet: டெட் தேர்வில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்களிக்க கோரி கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
டெட் தேர்வில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு
தமிழ்நாடு சட்டமன்றத்தில் டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தனித்தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய அவர், "15 முதல் 20 ஆண்டுகள் வரை மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு ஓயாது உழைத்த ஆசிரியர்களின் பணி மகத்தானது.
ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதனால் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பணியில் உள்ள ஆசிரியர்கள் நீடிக்கும் நிலை உருவாகியுள்ளது. 15 முதல் 20 வருடங்கள் வரை பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை தகுதித்தேர்வு எழுதச் சொல்லுவது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படையச் செய்யும்.
மத்திய அரசு கொண்டு வந்த டெட் தேர்வு தேர்ச்சி என்ற கட்டாய நடைமுறைப்படி தமிழ்நாட்டில் 3,28,701 ஆசிரியர்கள் பாதிப்படைவார்கள். இருப்பினும் ஆசிரியர்களுக்கு துணையாக தமிழக அரசு இருக்கும் என்பதை இப்போது தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன்படி 2010 ஆகஸ்ட் 23 ம் தேதிக்கு முன்னதாக பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் தனித் தீர்மானத்தை சட்டசபையில் அரசு கொண்டு வருகிறது.
இந்தத் தீர்மானத்தின் படி ஓய்வு பெறும் நிலையில் உள்ள தமிழக ஆசிரியர்களின் பணிப் பாதுகாக்கப்படும். இதுகுறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி நல்ல முடிவைக் கொண்டு வருவோம்" என பேசினார்.
அமைச்சர் ராஜ்மோகன் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |