கொரோனா தடுப்பூசி பெறாதவர்களைக் குறிவைத்து சுவிட்சர்லாந்து அரசு விதிக்க இருக்கும் கட்டுப்பாடுகள்
சுவிஸ் அரசு கொரோனா தடுப்பூசி பெறாதவர்களைக் குறிவைத்து புதிய கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, வரும் திங்கட்கிழமையிலிருந்து (20.12.2021), தடுப்பூசி பெற்றவர்கள் மற்றும் கொரோனா தொற்றிலிருந்து சமீபத்தில் குணமடைந்தவர்களுக்கு மட்டுமே உணவகங்கள், மதுபான விடுதிகள், கலாச்சார மற்றும் விளையாட்டு உள் அரங்கங்கள் ஆகிய இடங்களுக்குள் அனுமதி அளிக்கப்படும்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், மருத்துவமனைகளுக்கு அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையிலும் விதிக்கப்பட இருக்கும் இந்த கட்டுப்பாடுகள், 2022 ஜனவரி 24வரை அமுலில் இருக்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் குறித்து நேற்று அறிவித்த சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சரான Alain Berset, மாஸ்க் அணிய இயலாத இடங்களுக்கும், அமரும் இடம் வழங்க இயலாத இடங்களுக்கும் செல்லும் அனைவரும், கொரோனா பரிசோதனை செய்து, தங்களுக்கு கொரோனா இல்லை என்பதைக் காட்டும் ஆதாரத்தைக் காட்டினால்தான் அத்தகைய இடங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
கடந்த நான்கு மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி பெற்ற அல்லது பூஸ்டர் டோஸ் பெற்றவர்கள், மற்றும் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த கட்டுப்பாட்டிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும்.
இந்த புதிய கட்டுப்பாடு, தடுப்பூசி பெறாதவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, மற்றவர்களுக்கு கொரோனாவைப் பரப்பி, அதனால் அவர்கள் மோசமாக நோய்வாய்ப்படும் அபாயத்தை குறைப்பதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி (வெள்ளிக்கிழமை), ஒரே நாளில் சுவிட்சர்லாந்தில் புதிதாக 9,941 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள். அவர்களில் 1,627 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், 294 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
Omicron வகை மரபணு மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் வேறு பரவிவரும் நிலையில், நேற்றைய கொரோனா தொற்று எண்ணிக்கை வேறு அதிகமாக இருப்பதைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பி விடுமோ என்ற அச்சம் அரசுக்கு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.