சர்வதேச மாணவர்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளால் பிரித்தானியாவுக்குத்தான் இழப்பு: கல்வியாளர்கள் கருத்து
பிரித்தானியா, சர்வதேச மாணவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது, தானே தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதற்கு சமம் என்கிறார்கள் பிரித்தானிய கல்வியாளர்கள்.
சர்வதேச மாணவர்களுக்குக் கட்டுப்பாடுகள்
உலகிலேயே கல்வி கற்பதற்கு சிறந்த நாடுகளில் ஒன்றாகத் திகழ்வது பிரித்தானியா. உலகமே பொறாமை கொள்ளும் வகையில், கல்வித்தரத்தில் முன்னிலை வகிக்கின்றன அதன் பல்கலைக்கழகங்கள்.
ஆனால், சர்வதேச மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க பிரித்தானியா முயற்சி மேற்கொள்வது, இந்த நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவ மாணவியர், இரண்டு ஆண்டுகள் பிரித்தானியாவில் பணி செய்யும் வகையில், பட்டதாரி விசா (graduate visa) என்னும் விசா வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், அந்த விசாவை மதிப்பாய்வு செய்து, அதன் முடிவுகளை இன்று வெளியிட உள்ளது பிரித்தானிய அரசு. பட்டதாரி விசா தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காகவே இந்த மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்கிறார் பிரித்தானிய உள்துறைச் செயலரான ஜேம்ஸ் கிளெவர்லி.
தானே தன் தலையில் மண்ணைவாரிப் போட்டுக்கொள்ளுதல்
ஆனால், அரசின் இந்த கட்டுப்பாடுகள், தானே தன் தலையில் மண்ணைவாரிப் போட்டுக்கொள்ளுவதற்கு சமம் என்கிறார்கள் கல்வியாளர்கள். இது, மாணவர்களையும், புதுமைகளையும் வரவேற்கும் பிரித்தானியாவின் கொள்கைகளுக்கு எதிரானது என்று கூறும் அவர்கள், அப்படி சர்வதேச மாணவர்களுக்கு கல்வியை அளிப்பது, பிரித்தானியாவின் பொருளாதாரத்தையும் சமுதாயத்தையும் முன்னேற்றுவதற்கு உதவியாக அமைந்ததை மறுக்கமுடியாது என்கிறார்கள்.
பிரித்தானியாவில் தங்களுக்கு சரியான வரவேற்பில்லை என்பதை மாணவர்கள் உணர்ந்துகொள்ளும்போது, அவர்கள், தங்களை வரவேற்கும், நிதி உதவி செய்யும் அமெரிக்கா போன்ற நாடுகள் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பிவிடுவார்கள் என்று கூறும் கல்வியாளர்கள், ஏற்கனவே அப்படி பலர் வேறு நாடுகளை நோக்கித் திரும்பத் துவங்கிவிட்டார்கள் என்கிறார்கள்.
Financial Times ஊடகத்தின் ஆய்வுகளிலிருந்து, 2023ஆம் ஆண்டில், பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் மூன்றில் ஒரு பங்கு பல்கலைக்கழகங்களுக்கு கல்வி கற்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவ மாணவியரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது தெரியவந்துள்ளது.
பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் பயிலும் சர்வதேச மாணவர்கள், பிரித்தானியாவின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பைச் செய்கிறார்கள். அவர்கள், உள்ளூர் மாணவர்களை விட பல மடங்கு அதிக கட்டணம் செலுத்துகிறார்கள். அவர்கள் செலுத்தும் கட்டணத்தின் உதவியால்தான் உள்ளூர் மாணவர்களுக்கு பலகலைக்கழகங்கள் கட்டண சலுகைகள் வழங்குகின்றன. தாங்கள் பிரித்தானியாவிடமிருந்து பெறுவதைவிட, 10 மடங்கு பிரித்தானியாவுக்கு அதிகம் கொடுக்கிறார்கள் சர்வதேச மாணவர்கள்.
ஆக, அவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலம், பிரித்தானியா தனக்கு நஷ்டத்தையும், உலக அரங்கில் கெட்ட பெயரையும்தான் வாங்கிக்கொள்ளப்போகிறது என்கிறார்கள் பிரித்தானிய கல்வியாளர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |