சுவிஸில் வெளிநாட்டவர்கள் தடுப்பூசி பெறுவதில் கட்டுப்பாடு: முக்கிய மண்டலங்கள் உறுதி
சுவிஸ் குடிமக்கள் அல்லாதோர் கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு இனி கட்டுப்பாடுகள் கொண்டுவர முக்கிய மண்டலங்கள் முடிவு செய்துள்ளன.
சுவிட்சர்லாந்தில் வலாய்ஸ் மற்றும் கிராபண்டன் மண்டலங்களில் வெளிநாட்டவர்கள் மிக எளிதாக கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்வதாக தகவல் வெளியானது.
இந்த விவகாரம் பொதுமக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தவே, தற்போது கட்டுப்பாடுகள் விதிக்க குறிப்பிட்ட இரு மண்டலங்களும் முடிவு செய்துள்ளன. மேலும், வலாய்ஸ் மண்டலத்தில் மிக குறைவான சுற்றுலாப்பயணிகளே கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதாக அங்குள்ள சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மட்டுமின்றி வேறு மண்டலங்களை சேர்ந்த மக்களும் காத்திருப்போர் பட்டியலை மீறியுள்ளதாகவும், இது நாளுக்கு சுமார் 10 பேர் என்ற எண்ணிக்கையில் காணப்படுவதாகவும் வலாய்ஸ் மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கிராபண்டன் மண்டலத்தில் மிக அதிக எண்ணிக்கையிலான விடுமுறை இல்லங்கள் இருப்பதால் கொரோனா தடுப்பூசி எடுப்பவர்கள் தொடர்பில் பரிசோதனை செய்வது கடினம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், வெளிநாட்டவர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளது உறுதி படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சுவிஸ் குடிமக்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி எனவும், வேறு மண்டலங்களை சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, சுவிட்சர்லாந்தில் வசிப்பவர்கள் மட்டுமே நாட்டில் ஒரு டோஸ் தடுப்பூசி பெற தகுதியுடையவர்கள். ஆனால், எல்லை தாண்டிய தொழிலாளர்களும் சுவிஸில் தடுப்பூசி பெறுவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை சுகாதார அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, சுவிட்சர்லாந்தில் இதுவரை 645,055 பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறியது, இது மக்கள் தொகையில் 7.4% என்பது குறிப்பிடத்தக்கது.