பிரான்சில் இலவச கொரோனா பரிசோதனைகளுக்கு முடிவு: இனி யார் எவ்வளவு கட்டணம் செலுத்தவேண்டும்?
பிரெஞ்சுக் குடிமக்கள் அனைவருக்கும் இதுவரை கொரோனா பரிசோதனை இலவசம் என்றிருந்த நிலையில், இலவசப் பரிசோதனைகள் முடிவுக்கு வந்துள்ளன.
மற்ற சில நாடுகளைப்போல பிரான்ஸ் சில தரப்பினருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனையில் கட்டணம் செலுத்த விலக்களிக்கவில்லை. அதாவது, கொரோனா அறிகுறிகள் உடையவர்கள், கொரோனா தொற்றுடையவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள், பயணத்துக்காக கொரோனா பரிசோதனை செய்துகொள்பவர்கள் என அனைத்து தரப்பினருக்குமே இலவச பரிசோதனைகளை வழங்கியது பிரான்ஸ்.
இந்த சலுகை சமீபத்தில் சில தரப்பினருக்கு விலக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 15 முதல் மேலும் சில தரப்பினருக்கு சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
சுற்றுலாப்பயணிகள்
சுற்றுலாப்பயணிகளுக்கு சிறிது காலம் இலவச பரிசோதனைகள் வழங்கப்பட்ட நிலையில், மற்ற நாடுகள் சில அதைப் பின்பற்றாததால், ஜூலை மாதம் முதல் அந்த சலுகையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது.
அதன்படி, ஒருவர் இலவச பரிசோதனையை பெறவேண்டுமானால், அவர், தான் பிரான்சில் வாழிட உரிமம் பெற்றவர் என்பதையும் பிரெஞ்சு சுகாதார அமைப்பில் பதிவு செய்துகொண்டவர் என்பதையும் நிரூபிக்கவேண்டும் (தன்னிடம் carte vitale என்னும் சுகாதார அட்டை உள்ளதை நிரூபிக்கவேண்டும்).
நீங்கள் பிரான்சில் வாழ்ந்தாலும் உங்களுக்கு சுகாதார அட்டை இல்லையென்றால், (நீங்கள் சுகாதார அட்டை கோரி விண்ணப்பித்திருக்கும் பட்சத்தில்) கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் செலுத்தி அதற்கான ரசீதைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் சுகாதார அட்டை கிடைத்ததும், அதைக் காட்டி நீங்கள் பரிசோதனைக்கு செலுத்திய பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
வாழிட உரிமம் கொண்டவர்கள்
நீங்கள் பிரான்சில் வாழிட உரிமம் கொண்டவராக இருந்து உங்களிடம் சுகாதார அட்டை இருக்கும் பட்சத்தில், முன்பு நீங்கள் இலவசமாக எத்தனை முறை வேண்டுமென்றாலும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம் என்ற நடைமுறை இருந்தது. ஆனால், அது இப்போது மாறிவிட்டது.
அக்டோபர் 15 முதல், தடுப்பூசி பெறாதவர்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை கிடையாது!
அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற நோக்கில், சுகாதார பாஸ்போர்ட் தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானால் இந்த நடவடிக்கை கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒருவர் சுகாதார பாஸ்போர்ட் பெறவேண்டுமானால், அவர் ஒன்றில் முழுமையாக தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும், அல்லது சமீபத்தில் கொரோனாவிலிருந்து விடுபட்டிருக்கவேண்டும், அல்லது கடந்த 72 மணி நேரத்திற்குள் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் தனக்கு கொரோனா இல்லை என்ற முடிவைப் பெற்றிருக்கவேண்டும். தடுப்பூசி பெறாதாவர்கள் மீண்டும் மீண்டும் பரிசோதனை செய்துகொள்வதைத் தடுக்கும் வகையில் அக்டோபர் மத்தியிலிருந்து மருத்துவக் காரணங்கள் அல்லாத காரணங்களுக்காக இலவச கொரோனா பரிசோதனை செய்வது முடிவுக்கு வர உள்ளது.
தடுப்பூசி பெறாதவர்கள்
நீங்கள் கொரோனா தடுப்பூசி பெறாதவர்களானால், அக்டோபர் 15 முதல், இலவச கொரோனா பரிசோதனை செய்துகொள்ள மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு அவசியம். இல்லையென்றால், நீங்கள் கட்டணம் செலுத்தித்தான் பரிசோதனை செய்துகொள்ள முடியும்.
தடுப்பூசி பெற்றவர்கள்
தடுப்பூசி பெற்றவர்களுக்கு அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில், அல்லது அவர்கள் கொரோனா தொற்றுடையவருடன் தொடர்பிலிருந்தவரானால், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலே அவர்கள் இலவச பரிசோதனை செய்துகொள்லலாம். பயணத்துக்காக நீங்கள் கொரோனா பரிசோதனை செய்துகொண்டாலும் நீங்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டவரானால், உங்களுக்கும் இலவச பரிசோதனை உண்டு.
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும் சரி, இல்லையென்றாலும் சரி, அவர்களுக்கு எப்போதுமே இலவச பரிசோதனைதான்.
கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் எவ்வளவு?
- பிசிஆர் பரிசோதனை
- பிசிஆர் பரிசோதனைக்கான கட்டணம் 44 யூரோக்கள்.
- ஆன்டிஜன் பரிசோதனை
- ஆன்டிஜன் பரிசோதனைக்கான கட்டணம் 22 யூரோக்கள்.
- வீட்டிலிருந்தவண்ணம் செய்துகொள்ளும் பரிசோதனைகள்
- வீட்டிலிருந்தவண்ணம் செய்துகொள்ளும் பரிசோதனைகளுக்கான கட்டணம் 6 யூரோக்கள்.