சிறிய தவறினால் பதக்க வாய்ப்பை தவற விட்டேன்! கண்களில் ஆனந்த கண்ணீர்... ஒலிம்பிக்கில் பங்கேற்றுவிட்டு வந்த தமிழக வீராங்கனை நெகிழ்ச்சி
நகரத்தில் இருக்கும் பெண்களை விட கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கு இயற்கையாகவே உடல் வலிமை அதிகம் என ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தாயகம் திரும்பிய தமிழக வீராங்கனை ரேவதி கூறியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தாயகம் திரும்பிய மதுரை வீராங்கனை ரேவதி மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், தாய், தந்தை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் பாட்டி பராமரிப்பில் வளர்ந்தேன்.
பள்ளிப்படிப்பு தொடர்ந்த போது எனது விளையாட்டு ஆர்வத்தை கண்டு பலர் ஊக்குவித்ததினால் தொடர்ந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டு செயல்பட்டேன். நகரத்தில் இருக்கும் பெண்களை விட கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கு இயற்கையாகவே உடல் வலிமை அதிகம்.
தற்போது எனது நான்கு ஆண்டு கனவாக இருந்த ஒலிம்பிக் கனவு நிறைவேறியிருக்கிறது. டோக்கியோவில் இந்தியாவிற்காக களமிறங்கும் போது எனது கண்களில் ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது.
ஒலிம்பிக் போட்டியில் கலப்பு இரட்டையர் 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் பங்கேற்றது பெருமையாக இருந்தது. சிறிய தவறினால் பதக்க வாய்ப்பை தவற விட்டேன். இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்து இந்தியாவுக்காக பதக்கம் பெற வேண்டும் என்பதே எனது லட்சியமாக இருக்கிறது.
மதுரையில் உள்ள தடகள மைதானம் சீர்படுத்த வேண்டும் இதன் மூலம் மதுரையில் அதிகமான வீரர் மற்றும் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்காக தயாராவார்கள் என்று கூறியுள்ளார்.