மதுரோவின் வலக்கரம்... கண்டுபிடித்து தகவல் தெரிவித்தால் 25 மில்லியன் டொலர்: ட்ரம்ப் அறிவிப்பு
நிக்கோலஸ் மதுரோவின் வலக்கரமாக செயல்பட்ட டியோஸ்டாடோ கபெல்லோ ரோண்டன் என்பவரை கைது செய்ய தகவல் தெரிவிப்பவர்களுக்கு 25 மில்லியன் டொலர் வெகுமதியை ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தேடப்படும் நபர்
வெனிசுலாவின் உள்விவகாரம், நீதி மற்றும் அமைதி அமைச்சராக இருக்கும் கபெல்லோ ரோண்டன் பற்றி அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம் தேடப்படும் நபர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அவர் வெனிசுலாவின் உயர் அதிகாரிகளைக் கொண்ட ஊழல் மற்றும் வன்முறை போதைப்பொருள் பயங்கரவாத சதியின் ஒரு பகுதியாக இருப்பதாக அமெரிக்க அரசாங்கத்தால் குற்றம் சாட்டப்படுகிறார்.
62 வயதான கபெல்லோ ரோண்டன், பொதுமக்களைக் கொல்வது, சிறுமிகள் மற்றும் பெண்களை துஷ்பிரயோகம் செய்வது, அப்பாவி மக்களுக்கு எதிராக பொய்யான ஆதாரங்களையும் ஆயுதங்களையும் திணிப்பது உள்ளிட்ட பரவலான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட துணை இராணுவப் படைகளைக் கட்டுப்படுத்துகிறார்.

வெனிசுலாவின் FARC
பயங்கரவாத அமைப்பு என அடையாளப்படுத்தப்பட்ட வெனிசுலாவின் FARC என்ற குழுவின் ஒருங்கிணைப்பாளரும் கபெல்லோ ரோண்டன் என்றே அமெரிக்கா குறிப்பிடுகிறது.
மார்ச் 2020 இல் நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் ஒரு ஃபெடரல் குற்றப்பத்திரிகையில், போதைப்பொருள் பயங்கரவாதத்தில் ஈடுபட சதி செய்தல், கோகோயின் இறக்குமதி செய்ய சதி செய்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துப்பாக்கி குற்றச்சாட்டுகள் தொடர்பாக கபெல்லோ ரோண்டன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அப்போது அவர் தொடர்பில் தகவல் தெரிவித்தால் 10 மில்லியன் அமெரிக்க டொலர் வெகுமதி அறிவிக்கப்பட்டது. தற்போது நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கபெல்லோ ரோண்டன் மீதான வெகுமதியை 25 மில்லியன் டொலர் என அமெரிக்கா அதிகரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |