வெளிநாட்டில் அமெரிக்கர் கொலை: 5 மில்லியன் டொலர் சன்மானம் அறிவிப்பு
வங்கதேசத்தில் கொல்லப்பட்ட அவிஜித் ராயின் வழக்கில் குற்றவாளிகள் தொடர்பில் தகவல் அளிப்பவர்களுக்கு 5 மில்லியன் டொலர்களை சன்மானமாக வழங்க அமெரிக்க முடிவு செய்துள்ளது.
வங்கதேசத்தின் டாக்காவிற்கு கடந்த 2015ம் ஆண்டு புத்தக விழா ஒன்றிற்கு சென்ற ஆராய்ச்சியாளர் அவிஜித் ராய் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
உடன் இருந்த ராயின் மனைவி ரஃபிதா போன்யா அகமது கொடூரமாக தாக்கப்பட்டாலும் படுகாயங்களுடன் தப்பினார். வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் அவிஜித் ராய் அமெரிக்க குடிமகன் என்பதால் இந்த வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டது.
இந்த நிலையில் கொலையில் தொடர்புடையதாக 6 பேர் கைது செய்யப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டது. இருப்பினும் கைதானவர்களில் இருவர், சையத் ஜியாவுல் ஹக் மற்றும் அக்ரம் ஹுசைன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளனர்.
இந்த நிலையில் அல்கொய்தா பயங்கராவத அமைப்பால் ஈர்க்கப்பட்ட அன்சருல்லா பங்களா குழு ராய் மற்றும் அவரது மனைவியின் தாக்குதலுக்கு பொறுப்பேற்றனர்.
தற்போது இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ள அமெரிக்க வெளிவிவகாரத் துறை பாதுகாப்புச் சேவை, ராய் கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பான தகவலுக்கு நீதிக்கான வெகுமதி (ஆர்எஃப்ஜே) அலுவலகம் மூலம் 5 மில்லியன் டொலர் வரை வெகுமதியாக வழங்குவதாக அறிவித்துள்ளது.