உலகின் தங்கத்தில் பாதியை சொந்தமாக்கியவர்... எலோன் மஸ்க், முகேஷ் அம்பானியை விடவும் கோடீஸ்வரர்
உலகின் பெரும் கோடீஸ்வரராக, 400 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் எவரும் நெருங்க முடியாத உச்சத்தை எலோன் மஸ்க் தொட்டிருக்க, அவருக்கும் முன்னோடியாக ஒருவர் அந்த உச்சத்தை தொட்டுள்ளார்.
மிகப் பெரும் கோடீஸ்வரராக
14 ஆம் நூற்றாண்டின் மேற்கு ஆப்பிரிக்காவில் மாலி பேரரசின் புகழ்பெற்ற ஆட்சியாளராக அறியப்பட்டவர் மான்சா மூசா. உலகில் இதுவரை வாழ்ந்த மிகப் பெரும் கோடீஸ்வரராக மான்சா மூசா கருதப்படுகிறார்.
சமகால பணவீக்கத்தை ஈடுசெய்து கணக்கிட்டால், மான்சா மூசாவின் மதிப்பிடப்பட்ட சொத்து மதிப்பு இன்றைய நிலையில் 400 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
கி.பி 1280ல் பிறந்து கி.பி 1312ல் அரியணை ஏறிய அவர் மாலி பேரரசை ஒரு பொருளாதார சக்தியாக மாற்றினார். தற்போதைய மாலி, செனகல், ஐவரி கோஸ்ட் மற்றும் புர்கினா பாசோ போன்ற நாடுகளை உள்ளடக்கிய மாலி பேரரசானது, இயற்கை வளங்களில், குறிப்பாக தங்கம் மற்றும் உப்பு ஆகியவற்றின் சிகரமாக இருந்தது.
மட்டுமின்றி, பாம்புக், புரே மற்றும் வாங்கரா போன்ற பகுதிகளில் அமைந்துள்ள அதன் புகழ்பெற்ற சுரங்கங்கள் முடிவில்லாத செல்வத்தை வழங்கின. கூடுதலாக, டிரான்ஸ்-சஹாரா வர்த்தகத்தில் மாலி பேரரசின் திட்டமிட்ட ஈடுபாடு ஒரு வணிக மையமாக அதன் நிலையை உறுதிப்படுத்தியது.
மான்சா மூசா தனது அபரிமிதமான செல்வத்திற்காக மட்டுமல்ல, அவரது எல்லையற்ற பெருந்தன்மைக்காகவும் புகழ் பெற்றவர். மன்சா மூசாவின் வாழ்க்கையின் மிகவும் குறிப்பிடத்தக்க அத்தியாயங்களில் ஒன்று மக்காவிற்கு அவர் மேற்கொண்ட புனிதப் பயணம்.
தங்கத்தை பரிசாக அளித்தது
இதுவரையான வரலாற்றில் பிரம்மாண்டப் பயணமாக கருதப்படும் அதில் தங்கம் சுமந்து செல்லும் 100 ஒட்டகங்களும், 12,000 பணியாளர்களும், 60,000 அடிமைகளும் அடங்குவர். அவர் ஏறக்குறைய 18 டன் தங்கத்தை கொண்டு சென்றதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.
இது 2022ல் கிட்டத்தட்ட 957 மில்லியன் டொலர் மதிப்பிற்கு சமமானதாகும். அவரது பயணத்தின் போது, குறிப்பாக கெய்ரோவில் மக்களுக்கு தங்கத்தை பரிசாக அளித்தது, உள்ளூர் மக்கள் பலரை செல்வந்தராக மாற்றியது.
திடீரென்று பெருமளவு செல்வம் உள்ளே நுழைந்ததால் அது பொருளாதார உறுதியற்ற தன்மையை ஏற்படுத்துகிறது. அவரது பேரரசு பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்தது மட்டுமல்லாமல் கற்றல் மற்றும் கலாச்சாரத்தின் மையமாகவும் மாறியது.
மட்டுமின்றி, அறிவுசார் சாதனையின் கலங்கரை விளக்கமாக திம்பக்டு உருவானது என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |