10 ஆம் திகதி பிரான்சில் சந்திக்கும் ரிஷி சுனக்கும் இமானுவல் மேக்ரானும்: முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்திப்பு...
இம்மாதம், அதாவது மார்ச் 10 ஆம் திகதி பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்குடன் உச்சி மாநாடு ஒன்றில் பங்கேற்கிறார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.
பிரித்தானிய தூதர் விளக்கம்
36ஆவது இருதரப்பு உச்சி மாநாட்டுக்காக ரிஷியை பிரான்சில் சந்திக்கிறார் மேக்ரான்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த பிரான்சுக்கான பிரித்தானிய தூதரான Dame Menna Rawlings, இது இருநாட்டு உறவுகளை புதுப்பித்துக்கொள்ள அரியதொரு வாய்ப்பு என்று கூறியுள்ளார்.
பிரெக்சிட்டுக்குப் பின் பிரான்ஸ் பிரித்தானியா உறவில் ஏற்பட்ட மோதல்கள், குறிப்பாக எல்லை மற்றும் மீன்பிடித்தல் பிரச்சினைகள் பெருமளவில் உலகின் கவனம் ஈர்த்தன.
ஒற்றுமையை உருவாக்கிய உக்ரைன் போர்
ஆனால், ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து ஐரோப்பிய மற்றும் நேட்டோ நாடுகளின் ஒற்றுமை உணர்வு வெளிப்படத் துவங்கியது. உக்ரைனுக்கு உதவுவதற்காக நாடுகள் கைகோர்க்க, நட்பு வளரத் துவங்கியது.
இந்நிலையில், பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறுகிறார் Dame Menna Rawlings.
அதற்குக் காரணம், பிரான்ஸ் பிரித்தானியாவின் ஐந்தாவது பெரிய வர்த்தகக் கூட்டாளி, ஐந்தாவது முக்கிய ஏற்றுமதி சந்தை.
ரிஷி பிரித்தானிய பிரதமரானதைத் தொடர்ந்து அவர் அரசு முறைப்பயணமாக செல்லும் இரண்டாவது பயணமாகும் பிரான்ஸ் பயணம்.
இதற்கு முன் உக்ரைனுக்கு மட்டுமே பயணித்துள்ள அவர், தற்போது பிரான்ஸ் செல்ல இருக்கிறார். ரிஷி தன்னுடன் வேறு சில அமைச்சர்களையும் அழைத்துவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் வழியாக ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதப் புலம்பெயர்வோர் நுழையும் விடயம் பெரிய பிரச்சினையாகியுள்ள நிலையில், அது குறித்தும், பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை, ஆற்றல் பகிர்வு, பருவநிலை மாற்றம் என பல்வேறு விடயங்கள் குறித்து தலைவர்கள் பேசிக்கொள்ளவேண்டியுள்ளது.
உண்மையில், அவற்றை எல்லாம் இப்போதே பேசிமுடிக்கமுடியாது. அவ்வளவு விடயங்கள் உள்ளன பேசுவதற்கு. ஆக, உச்சி மாநாட்டுக்குப் பிறகு அவற்றையெல்லாம் குறித்துப் பேசுவதற்கு வழி கிடைக்கும் என தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார் Dame Menna Rawlings.
Pic: British Embassy Paris / Shag 7799 / Alexandros Michailidis / Shutterstock