கனடாவில் அதிகரித்து வரும் விலைவாசி... இலங்கையையும் இந்தியாவையும் பார்த்துக் கற்றுக்கொள்ள ஆலோசனை
கனடாவில் விலைவாசி அதிகரித்துவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று இலங்கை, இந்தியா போன்ற நாடுகளைப் பார்த்து கனடா கற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார் கனேடிய வரிசெலுத்துவோர் கூட்டமைப்பின் ஆல்பர்ட்டா பகுதி இயக்குநர்.
கனேடிய வரிசெலுத்துவோர் கூட்டமைப்பின் ஆல்பர்ட்டா பகுதி இயக்குநரான Franco Terrazzano எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், விலைவாசியைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதை, கனடா மற்ற நாடுகளைப் பார்த்துக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.
கனடாவில் எரிபொருட்களுக்கு ஒவ்வொரு பகுதிக்கு ஒவ்வொரு விதமான வரிகள் அமுலில் உள்ளன. உதாரணமாக, மொன்றியல் சாரதிகள் எரிபொருள் நிரப்பும்போது, மாகாண மற்றும் பெடரல் எரிபொருள் வரிகள், மாகாண மற்றும் பெடரல் விற்பனை வரிகள், சுங்கவரி மற்றும் கார்பன் வரி ஆகிய வரிகளைச் செலுத்துகிறார்கள். இதே நிலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகிறது. வரியாக செலுத்தும் இந்த பணம் இருந்தால், மளிகை முதலான அத்தியாவசிய பொருட்கள் வாங்க அது உதவியாக இருக்கும் என மக்கள் கருதுகிறார்கள்.
கனடாவில் இப்படி வரிகளால் விலைவாசி உயர்ந்துகொண்டிருக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த மற்ற நாடுகள் வேறு மாதிரியான நடவடிக்கைகள் எடுத்துள்ளன. உதாரணமாக, பிரித்தானியா 8 பில்லியன் டொலர்கள் அளவுக்கு எரிபொருள் வரி உதவியாக அறிவித்துள்ளது. தென்கொரியா தனது எரிபொருள் வரியில் 30 சதவிகிதம் வரை குறைத்துள்ளது. ஜேர்மனி மோட்டார் வாகன எரிபொருட்களின் வரிகளைக் குறைத்துள்ளது. நெதர்லாந்து தனது எரிபொருள் வரியை 21 சதவிகிதம் குறைத்துள்ளது.
இத்தாலி, அயர்லாந்து, இஸ்ரேல், இந்தியா, பெரு, போலந்து, இந்தியாவின் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், நியூபவுண்ட்லேண்ட் மற்றும் லேப்ரடார், நியூஜெர்ஸி மற்றும் ப்ளோரிடா ஆகியவை எரிபொருள் வரிகளைக் குறைத்துள்ளன.
சில நாடுகள் எரிபொருள் வரி மட்டுமின்றி பல்வேறு வரிகளைக் குறைத்துள்ளன. இத்தாலி, வருவாய் மற்றும் வர்த்தக வரிகளைக் குறைத்துள்ளது. ஸ்பெயின் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகள் மின்சார வரிகளைக் குறைத்துள்ளன.
இலங்கை உணவு மற்றும் மருந்து வரிகளைக் குறைத்துள்ளது. பிரேசில் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் இறக்குமதி வரிகளைக் குறைத்துள்ளன. துருக்கி உணவு வரியைக் குறைத்துள்ளது. தென்னாப்பிரிக்கா வர்த்தக வரிகளைக் குறைத்துள்ளது. குரோவேஷியா ஆற்றல், சுகாதார தயாரிப்புகள் மற்றும் உணவு வரிகளைக் குறைத்துள்ளது. கிரீஸ், அல்ஜீரியா மற்றும் அல்பேனியா ஆகிய நாடுகளும் வரி குறைப்புகளை அறிவித்துள்ளன.
இப்படி இத்தனை நாடுகள் வரிஅக்ளைக் குறைத்து விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது சாத்தியம் என செய்து காட்டியுள்ள நிலையில், கனேடியர்கள் தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், கனடா ஏன் எரிபொருள் வரிகளைக் குறைத்து மக்களுக்கு உதவக்கூடாது என கேள்வி எழுப்புகிறார் கனேடிய வரிசெலுத்துவோர் கூட்டமைப்பின் ஆல்பர்ட்டா பகுதி இயக்குநரான Franco Terrazzano!