எனது மகளை இயற்கைக்கு மாறாக கொடுமை செய்த கணவர் - ரிதன்யாவின் தந்தை பரபரப்பு புகார்
ரிதன்யா வழக்கில், அவரின் கணவர் மீது ரிதன்யாவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
ரிதன்யா உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த இளம் பெண் ரிதன்யா, திருமணமான 2 மாதங்களில் ஆடியோ வெளியிட்டு உயிரை மாய்துகொண்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில், ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
ரிதன்யாவிற்கும், கவின் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. ரிதன்யாவின் பெற்றோர் 300 சவரன் தங்க நகைகள் மற்றும் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
ஆனால், திருமணமான 2 வாரங்களில் கூடுதலாக 200 சவரன் தங்க நகைகளை பெற்றோரிடம் வாங்கி வருமாறு அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, ஆடியோ வெளியிட்டு ரிதன்யா உயிரை மாய்த்துக்கொண்டார்.
இந்த வழக்கு விசாரணை மந்தமாக நடைபெற்று வருவதாகவும், வேறு விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும் என ரிதன்யாவின் தந்தை, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி யிடம் மனு அளித்துள்ளார்.
பாலியல் துன்புறுத்தல்
இந்த மனுவில், ரிதன்யாவின் கணவர் மீது பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்தியுள்ளார். அந்த மனுவில், "கடந்த ஜூன் 25 ஆம் திகதி தங்களது வீட்டிற்கு வந்த மகளை, கணவர் குடும்பத்தினர் அழைத்த போது அவர் அங்கு செல்ல மறுத்தார்.
அதுகுறித்து தனது மகளிடம் கேட்டதற்கு, கவின்குமார் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதாகவும் தொடர்ந்து விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதுடன், இயற்கைக்கு மாறான இழிவான செயல்களில் ஈடுபட வற்புறுத்தியதாகவும் கூறினார்.
மேலும், கணவரின் இந்த கொடுமைகளை வெளியே கூறினால், உயிரை மாய்த்துக்கொள்வோம் என கவின் குமாரின் பெற்றோர் மிரட்டியதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காவல் நிலைய முதல் தகவல் அறிக்கையில் உள்ள சட்டப் பிரிவுகளை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
வரதட்சணை கொடுமை காரணமாக ரிதன்யா உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்பட்டு வரும் நிலையில், பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.