சவுதியின் ரியாத் விமான நிலையம் அருகே கரும்புகை: குண்டுவெடிப்பு மற்றும் வான்வழி அச்சுறுத்தல்கள்
Riyadh Explosions Tension Spike and Aerial Alerts: ரியாத் சர்வதேச விமான நிலையம் அருகே திடீரென எழுந்த அடர்ந்த கரும்புகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான நிலையம் அருகே அடர்ந்த கரும்புகை
சனிக்கிழமை சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் அருகே திடீரென அடர்ந்த கரும்புகை எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்பகுதியில் நள்ளிரவில் விடுக்கப்பட்ட திடீர் வான்வழி அச்சுறுத்தல்களை அடுத்து சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களும் அரங்கேறியது.
ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படையினருக்கும், சவுதி ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல்களே தற்போதைய பதற்றமான சூழ்நிலைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

ஹவுதி படையினர் மெக்கா நகரை தாக்க முயற்சி செய்து வருவதாக சவுதி அரேபியா குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டுகளை ஹவுதிகள் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.
விமான நிலையத்தில் சிக்கல்
சவுதி தலைநகரில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு செல்வதற்கான முக்கிய நெடுஞ்சாலையில் பெரும் கரும்புகை திரண்டு எழுவது தொடர்பான புகைப்படங்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வெடிப்பு சத்தம் மற்றும் புகை மண்டலம் போன்றவை அசாதாரண சூழ்நிலையை விளக்கினாலும் இது தொடர்பான உண்மையான காரணத்தை சவுதி அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.
இந்த பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் கடுமையான செயல்பாட்டு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்று FlightRadar24 தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழப்புகளோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.