ரோபோவிற்கு துணி மடிக்க கற்று கொடுத்து மாதம் ரூ.85,000 வருமானம்
robot trainers earn rs 85,000 by train robot to fold clothes: ரோபோ மற்றும் ஏஐ மனிதர்கள் செய்யும் பல்வேறு வேலைகளை செய்து வரும் நிலையில், இதனால் எதிர்காலத்தில் பாரிய வேலை இழப்பு ஏற்படும் என்ற அச்சம் மனிதர்களிடையே உள்ளது.
ஆனால் மனிதர்களை செய்யும் வேலைகளை ரோபோக்கள் எப்படி செய்ய வேண்டுமென, அதற்கு மனிதர்களே பயிற்சியளித்து மாதம் ரூ.85,000 வரை வருமானம் ஈட்டுகின்றனர்.
ரோபோவிற்கு பயிற்சியளித்து மாதம் ரூ.85,000 வருமானம்
கோப்பைகளை நகர்த்துவது, பாட்டில் மூடிகளை திறப்பது, மேற்பரப்புகளைத் துடைப்பது, பாத்திரம் கழுவுவது, துணிகளை மடிப்பது போன்ற வேலைகளை இந்த ரோபோ பயிற்சியாளர்கள் அசைவுப் பதிவுக் கருவிகளை அணிந்துகொண்டு செய்கிறார்கள்.

பின்னர் அந்தத் தரவுகள் செயலாக்கப்பட்டு, சமையலறைகள், தொழிற்சாலைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்காக உருவாக்கப்பட்ட ரோபோக்களுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
சீனாவின் சமூக ஊடகங்கள் மற்றும் ஆட்சேர்ப்புத் தளங்களில் இதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வேகமாகப் பரவி வருகின்றன.
இந்த வேலைக்கு மாதச் சம்பளம் 4,000 முதல் 6,000 யுவான் வரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.57,000 முதல் ரூ. 85,000 வரை) உள்ளது.
வேலை இழந்தவர்கள், பகுதி நேர வேலை தேடும் கல்லூரி மாணவர்கள் ஆகியோரை இந்த பணி ஈர்த்துள்ளது.
வாகனத் துறையில் தனது வேலையை இழந்த 40 வயதான லியு யூன், தனது பழைய துறைக்குத் திரும்புவதற்குப் பதிலாக இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தார்.
பெய்ஜிங்கில் உள்ள ஒரு பணியிடத்தில், தனது மணிக்கட்டில் சென்சார் கைப்பட்டையையும், விரல்களில் சிப்புகளையும் அணிந்துகொண்டு, அவர் ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட முறை திரையில் தோன்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி கோப்பைகளை நகர்த்துகிறார் மற்றும் மேற்பரப்புகளைத் துடைக்கிறார்.

22 வயதான பல்கலைக்கழக மாணவரான சன், விடுமுறைக்காலப் பயிற்சி வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தபோது இந்த வேலையைத் தொடங்கினார்.
பகல் நேரப் பணிக்கு 120 யுவானும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,700) இரவு நேரப் பணிக்கு 135 யுவானும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,917) ஊதியம் வழங்கப்பட்டது.
துணிகளை மடிப்பது, தரையைச் சுத்தம் செய்வது மற்றும் திட்டமிடப்பட்ட நடமாட்டங்களைப் பதிவு செய்வது ஆகியவை அவரது பணிகளில் அடங்கும்.
ஆனால் ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்வதால் ஏற்படும் மன மற்றும் உடல் அழுத்தம் காரணமாக சில வாரங்களில் பலரும் இந்த வேலையை தொடர்வதில்லை.

பணியிடத்தில் உள்ள ஒரு பெரிய திரையில், பணியாளர்களின் உற்பத்தித்திறன் மற்றும் துல்லியத்தின் அடிப்படையிலான நிகழ்நேரத் தரவரிசை காட்டப்படுகிறது. தினசரி ஒதுக்கீடு 160 பணிகளாக இருந்தபோதிலும், சிறப்பாகச் செயல்பட்டவர்கள் 260க்கும் மேற்பட்ட பணிகளைக் கையாண்டுள்ளனர்.
ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த குவோ ஹாங்ஜுவான், தன் குழந்தையைப் பார்த்துக்கொண்டே, ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வீட்டில் இருந்தபடியே புத்தகங்களை ஒழுங்கமைப்பது, சாப்பாட்டு மேசையைத் துடைப்பது போன்ற பணிகளைச் செய்து, அதன் மூலம் மாதத்திற்கு 4,000 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.56,000) சம்பாதிக்கிறார்.
ஆகஸ்ட் மாதம், ஷென்சென் நகரைச் சேர்ந்த பைக்சியன் ஏஐ நிறுவனம், தெருக்களைச் சுத்தம் செய்பவர்களுக்குத் தரவு சேகரிக்கும் கருவிகளை வழங்கியுள்ளது.