துருக்கியின் பிரபல சுற்றுலாத் தளத்தில் சரிந்து விழுந்த பாறை: 2 பேர் பலி, 5 பேர் படுகாயம்
Rockslide kills 2 in Turkey's Cappadocia: துருக்கியில் சுற்றுலாத் தளத்தில் பாறை சரிந்து விழுந்ததில் 2 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
பாறை சரிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு
மத்திய துருக்கியின் பிரபலமான சுற்றுலா தளமான கப்படோசியாவில்(Cappadocia) எதிர்பாராத விதமாக பாறை இடிந்து விழுந்ததில் குறைந்தது 2 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
கோரேமே(Göreme) நகரில் உள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்தில் இருந்த பிரம்மாண்டமான பாறை ஒன்று சரிந்து விழுந்ததிலேயே இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது.
வியாழக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட இந்த விபத்தில் மேலும் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த இரண்டு பேரின் உடல்களை மீட்டதாக அப்பகுதியில் மாகாண ஆளுநர் ஹுசெயின் கோக் தெரிவித்துள்ளார்.

மேலும் பாறை இடிபாடுகளில் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் மீட்பு படையினர் தொடர்ந்து தீவிர தேடுதலை நடத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் பாறை சரிவுக்கான துல்லியமான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் ஊடகங்களில் வெளியான செய்திகளில், அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக பாறை அமைப்பு பலவீனம் அடைந்து சரிந்து இருக்கலாம் என்று தெரிவிக்கின்றன.