மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர், எம்பாப்பே…கால்பந்து உலகில் ஊதியத்தில் முதலிடம் யாருக்கு?
சமகால கால்பந்து விளையாட்டில் உலகின் தலைசிறந்த வீரர்களாக ரொனால்டோ, நெய்மர், மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே ஆகிய நால்வரும் பார்க்கப்பட்டு வரும் நிலையில், கால்பந்து உலகில் யாருக்கு ஊதியம் அதிகம் என்ற ஒப்பீடும் ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யமாக பகிரப்பட்டு வருகிறது.
யாருக்கு அதிக சம்பளம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் வைத்து நடைபெற்ற கால்பந்து போட்டியில் உலகின் தலைசிறந்த 4 வீரர்கள் விளையாடியதை கண்டு மகிழ்ச்சியில் அரபு உலகம் திக்குமுக்காடிப் போயுள்ளது.
இதற்கிடையில் இந்த நான்கு நட்சத்திர கால்பந்து வீரர்களுக்கு மத்தியில் யாருக்கு ஊதியம் அதிகம் என்று ரசிகர்கள் அடிக்கடி சுவாரஸ்யமாக ஒப்பீடு நடத்துவதும் தொடர்ந்து அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
GETTY IMAGES
கத்தார் உலக கோப்பை போட்டிகளுக்கு பிறகு, சவுதி அரேபியாவை சேர்ந்த அல்-நாசர் அணிக்காக விளையாட போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒப்புக் கொண்ட பிறகு, கால்பந்து வரலாற்றில் இதுவரை யாரும் நினைத்துக்கூட பார்க்காத ஊதியத்தை ரொனால்டோவுக்கு சவுதி அரேபியா கால்பந்து கிளப் அள்ளிக் கொடுக்க முன்வந்துள்ளது.
அதனடிப்படையில், ரொனால்டோவுக்கு அல்-நாசர் அணி ஆண்டொன்றுக்கு சுமார் 1,800 கோடி ரூபாயை ஊதியமாக கொடுக்கிறது. இரண்டரை ஆண்டுகள் வரை அல்-நாசர் கிளப்பிற்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ள ரொனால்டோ அதற்காக மொத்தமாக 4,400 கோடி ரூபாயை ஊதியமாக பெறுகிறார்.
GETTY IMAGES
பார்சிலோனா அணிக்காக நீண்ட காலம் விளையாடிய மெஸ்ஸி, கடந்த 2021ம் ஆண்டு பிரான்சை சேர்ந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாட ஒப்பந்தமானார்.
அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆண்டொன்றுக்கு சுமார் 530 கோடி ரூபாயை ஊதியமாக பெறுவதாக கடந்த நவம்பரில் வெளியான ஃபோர்ப்ஸ் இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியுடன் ஒப்பந்தத்தை 2025ம் ஆண்டு வரை நெய்மர் புதிப்பித்துள்ள நெய்மர் ஆண்டொன்றுக்கு சுமார் 450 கோடி ரூபாயை ஊதியமாக பெறுவதாக ஃபோர்ப்ஸ் இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
GETTY IMAGES
கால்பந்து உலகில் இளம் நட்சத்திரமான கிலியான் எம்பாப்பே ஆண்டொன்றுக்கு சுமார் 890 கோடி ரூபாய் ஊதியமாக ஈட்டுகிறார். ரொனால்டோ சவுதி கிளப்புடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு வரை எம்பாப்பே தான் உலகில் அதிக ஊதியம் வாங்கும் கால்பந்து வீரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரொனால்டோவை முந்தும் மெஸ்ஸி, எம்பாப்பே
தற்போதைய நிலவரப்படி ஊதிய அடிப்படையில் மெஸ்ஸி, எம்பாப்பே ஆகிய இருவரைக் காட்டிலும் ரொனால்டோ மிக உச்சத்தில் இருக்கிறார்.
ஒருவேளை பி.எஸ்.ஜி. அணியுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பிறகு, சவுதி கிளப்பில் மெஸ்ஸியும் களமிறங்கினால் ரொனால்டோவின் ஊதியத்தை அவர் மிஞ்சக் கூடும்.
GETTY IMAGES
அதே போல இளம் நட்சத்திரமான எம்பாப்பேவை தங்கள் கிளப்பிற்கு இழுக்க கோடிகளை கொட்டி கொடுக்க பல்வேறு கிளப் நிர்வாகங்கள் தயாராக இருப்பதும் அனைவரும் அறிந்ததே, அத்துடன் திறமையும் இளமையும் கொண்டவராக பார்க்கப்படும் எம்பாப்பே, பல சாதனைகளைப் படைப்பது மட்டுமின்றி ஊதியம் பெறுவதிலும் பல உச்சங்களைத் தொடுவார் என்று கால்பந்து நிபுணர்கள் கணித்துள்ளனர்.