துருக்கி-சிரியா நிலநடுக்கம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிய ரொனால்டோ
துருக்கி-சிரியா நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ நிவாரணப் பொருட்களை அனுப்பினார்.
உலகப் புகழ்ப்பெற்ற போர்ச்சுகல் கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட விமானத்தை அனுப்பியுள்ளதாக ஸ்கை ஸ்போர்ட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் 7.8 மற்றும் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் இரு நாடுகளையும் உலுக்கியத்தில், 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இந்த சோக சம்பவம் நடந்த உடனேயே சர்வதேச சமூகத்தின் உதவிகள் குவியத் தொடங்கின.
Getty Images
ரொனால்டோ, நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடாரங்கள், உணவுப் பொட்டலங்கள், தலையணைகள் மற்றும் போர்வைகள், படுக்கைகள், குழந்தைகளுக்கான உணவு மற்றும் பால் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கு பணம் செலுத்தினார்.
முன்னதாக, ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி, கைலியன் எம்பாப்பே மற்றும் நெய்மர் ஜூனியர் உள்ளிட்ட கால்பந்து ஜாம்பவான்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தங்கள் கையொப்பமிடப்பட்ட ஜெர்சிகளை ஏலத்தில் விட்டனர்.
இத்தாலிய கிளப் அட்லாண்டாவின் துருக்கிய கால்பந்து வீரரான மெரிஹ் டெமிரல், தனது சக விளையாட்டு வீரர்களை அணுகி, நிதி திரட்ட ஏலத்தில் விடக்கூடிய கையொப்பமிடப்பட்ட உபகரணங்களை கேட்டபோது இந்த முயற்சி தொடங்கியது.