பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு
அமெரிக்காவின் சவுத் ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு முனைவர் பட்ட மாணவர், சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரையும் அவரது தோழியையும் கொலை செய்ததாக அவர்களது அறைத்தோழர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கொலைக் குற்றச்சாட்டு
27 வயதான வங்கதேச மாணவர்கள் ஜாமில் லிமோன் மற்றும் நஹிதா பிரிஸ்டி ஆகியோரின் மரணங்கள் தொடர்பாக, ஹிஷாம் அபுஹார்பியே மீது ஆயுதத்தைப் பயன்படுத்தி முன்னரே திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த இருவரும் கடந்த வாரத்திலிருந்து காணாமல் போயிருந்தனர். டம்பாவில் உள்ள ஹோவர்ட் ஃபிராங்க்லேண்ட் பாலத்தில் வெள்ளிக்கிழமையன்று லிமோனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், அதேவேளையில் பிரிஸ்டியின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, லிமோன் மற்றும் அபுஹார்பியே இருவரும் தங்கியிருந்த குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்ட இரத்தத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு, பிரிஸ்டி இறந்திருக்கக்கூடும் என்று தாங்கள் நம்புவதாகத் தெரிவித்து, விசாரணை அதிகாரிகள் வங்கதேசத்தில் உள்ள அவரது குடும்பத்தினரைத் தொடர்புகொண்டுள்ளனர்.
மேலும், சட்ட அமலாக்கத் துறையினரால், வெள்ளிக்கிழமை காலையில் அபுஹார்பியே கைது செய்யப்பட்டதாக ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொலைக் குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, 26 வயதான அபுஹார்பியே மீது, சட்டவிரோதமாக சடலத்தை இடமாற்றம் செய்தல், மரணத்தை மறைக்கும் நோக்கத்துடன் அதுகுறித்துத் தெரிவிக்கத் தவறுதல், தடயங்களைச் சிதைத்தல், சட்டவிரோதச் சிறைவைப்பு மற்றும் தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளதாக ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இரண்டு முறை விசாரணை
மருத்துவப் பரிசோதகர் லிமோனின் மரணத்திற்கான காரணத்தை இன்னும் கண்டறிந்து வருவதாகவும், வார இறுதியில் பிரேதப் பரிசோதனை முடிவுகளை வெளியிடக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரிஸ்டியைத் தேடும் பணியும் விசாரணையும் தொடரும் நிலையில், வெள்ளிக்கிழமை கைது செய்யப்படுவதற்கு முன்பு, அபுஹர்பியேவிடம் சட்ட அமலாக்கத் துறையினர் குறைந்தது இரண்டு முறை விசாரணை நடத்தியிருந்தனர்.

ஹில்ஸ்பரோ மாவட்ட அரசு சட்டத்தரணி அலுவலகத்தின்படி, அபுஹார்பியே சனிக்கிழமை காலை நீதிமன்றத்தில் முதன்முறை ஆஜரானார், மேலும் ஏப்ரல் 28 அன்று நடைபெறும் விசாரணைக்கு முந்தைய தடுப்புக் காவல் விசாரணை வரை அவர் சிறையில் வைக்கப்படுவார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |