காமன்வெல்த் தடகளத்தில் இலங்கைக்கு முதல் தங்கம் - சாதித்த ரூமேஷ் தரங்கா
காமன்வெல்த் தொடரில், ஈட்டி எறிதலில் இலங்கை வீரர் ரூமேஷ் தரங்கா தங்கம் வென்றுள்ளார்.
ரூமேஷ் தரங்கா
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் விளையாட்டு தொடர் கடந்த ஜூலை 23 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில், இலங்கை வீரர் ரூமேஷ் தரங்கா பத்திரக(Rumesh Tharanga Pathirage) 89.75 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இதன் மூலம், 23 வயதான ரூமேஷ் தரங்கா, காமன்வெல்த் விளையாட்டில் தடகளத்தில் இலங்கைக்கு முதல் தங்க பதக்கத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.
85.83 மீட்டர் தூரம் எறிந்த டோக்கியோ 2020 ஒலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கத்தை வென்றார்.
மற்றொரு இந்திய வீரரான யாஷ் வீர் சிங் 85.41 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "இலங்கைக்கு முதல் ஈட்டி எறிதல் தங்கப் பதக்கத்தைக் கொண்டு வருவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இலங்கைக்காக நான் மேடையில் நின்றபோது நமது தேசிய கீதம் இசைக்கப்பட்டதைக் கேட்டு பெருமிதம் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இலங்கையின் களுத்துறையில் பிறந்த ரூமேஷ் தரங்கா, கொழும்பில் உள்ள புனித பீட்டர் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார்.
பந்துவீச்சாளரான இவர், தனது கல்லூரி அணிக்காக விளையாடிய போது, மணிக்கு 134 கி.மீ வேகத்தில் பந்து வீசியதாக கூறப்படுகிறது.
இவரது தந்தை ஒரு வட்டு மற்றும் குண்டு எறிதல் வீரர் என்பதால், இவரின் ஆர்வமும் இந்த விளையாட்டின் மீது திரும்பியுள்ளது.
இந்த 2026 காமன்வெல்த் தொடரில் ஆண்கள் வட்டு எறிதலில் இலங்கை வீரர் பாலித பண்டாரா வெள்ளி பதக்கம் வென்றார்.

இதன் மூலம், ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளியுடன் இலங்கை பதக்க பட்டியலில் 14வது இடத்தில் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |