உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரை கைப்பற்றிய ரஷ்யா: பொதுமக்கள் வீடுகளுக்குள் இருக்க உத்தரவு
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்க்கிவ்வை ரஷ்ய ராணுவத்தினர் இன்று காலை கைப்பற்றியுள்ளனர் என அங்குள்ள உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனை ரஷ்யா நான்காவது நாளாக அனைத்து பக்கங்களில் இருந்தும் மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது, இந்த நிலையில் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்க்கிவ்வை ரஷ்ய ராணுவத்தினர் இன்று அதிகாலை அதிரடியாக தாக்கியள்ளனர்.
உக்ரைனின் கார்க்கிவ் பகுதி கிட்டத்தட்ட 1.5 மில்லியன் மக்கள்தொகை கொண்டது. மேலும் இந்த நகரானது ரஷ்ய நாட்டு எல்லையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிலும்,ரஷ்ய நகரமான பெல்கோரோடில் இருந்து 80 கிமீ தொலைவிலும் உள்ளது.
ரஷ்யா ராணுவத்தின் இந்த தாக்குதலை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி கார்க்கிவ் பகுதியில் உள்ள அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, இன்று அதிகாலை ரஷ்ய ராணுவத்தினர் கார்க்கிவ் நகரின் தெருக்களில் நுழைந்து தாக்கும் வீடியோ பதிவை அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பதிவு செய்து அவரது டெலெக்ராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.