11 லட்சம் பேரை பிணைக் கைதிகளாக பிடித்த ரஷ்யா: உக்ரைன் குற்றச்சாட்டு
2 லட்சம் குழந்தைகள் உட்பட 11 லட்சம் உக்ரேனியர்களை பிணைக் கைதிகளாக ரஷ்யா வைத்திருப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் 70-வது நாளாக போர் நடந்துவருகிறது, ஆனாலும் இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியவில்லை. ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையில், குழந்தைகள் உட்பட பல உக்ரைனியர்களை மீட்டு தங்கள் நாட்டுக்கு அழைத்து வந்ததாக ரஷ்யா கூறியுள்ளது. மறுபுறம், ரஷ்யா சுமார் 2 லட்சம் குழந்தைகளை தங்கள் நாட்டுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
Kyiv Independent-ன் அறிக்கையின்படி, இரண்டு லட்சம் குழந்தைகள் உட்பட 11 லட்சம் உக்ரேனிய குடிமக்கள் ரஷ்ய வீரர்களால் வலுக்கட்டாயமாக பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், பிப்ரவரி 24 முதல், ரஷ்ய ஆக்கிரமிப்பு டான்பாஸில் இருந்து 1,96,356 குழந்தைகள் உட்பட 1,092,137 உக்ரைனியர்கள் ரஷ்யாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
திங்களன்று 11500 பேர் ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்:
1,847 குழந்தைகள் உட்பட 11,500-க்கும் மேற்பட்டோர் திங்களன்று உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்கு Kyiv அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு இல்லாமல் நாடு கடத்தப்பட்டனர் என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மக்கள் தங்கள் கோரிக்கையின் பேரில் உக்ரைனில் இருந்து வெளியேற்றப்பட்டதாக மாஸ்கோ கூறியது. அதேசமயம், ரஷ்யா வலுக்கட்டாயமாக உக்ரேனியர்களை ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்வதாக உக்ரைன் கூறுகிறது.
ரஷ்ய தாக்குதலில் 3,153 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்:
ஐ.நா அறிக்கையின்படி, ரஷ்ய தாக்குதலால் பிப்ரவரி 24 முதல் 3,153 உக்ரைன் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 3,316 பேர் காயமடைந்துள்ளனர். ஒடெசா மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் 14 வயது சிறுவன் கொல்லப்பட்டார், 17 வயது சிறுமி காயமடைந்தார்.
இரும்பு தொழிற்சாலையில் இருந்து 100 குடிமக்கள் வெளியேற்றப்பட்டனர்:
மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்ட 100 பொதுமக்கள் , ரஷ்ய துருப்புக்களால் சூழப்பட்டு, அருகிலுள்ள நகரமான ஜபோரிஜியாவை அடைந்துள்ளனர். இதற்காக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.