பிரபல அமெரிக்க இளம் வீராங்கனையை கைது செய்த ரஷ்யா! உக்ரைன் நெருக்கடிக்கு மத்தியில் பரபரப்பு
பிரபல அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனையை ரஷ்யா கைது செய்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா பரபரப்புக்கு இடையே பிரிட்னி கிரினர் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உக்ரைனில் போர் நடைபெற்று வரும் நிலையில் இதை மையமாக வைத்து அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. ரஷ்யா மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பொருளாதார தடைகளை தொடர்ச்சியாக விதித்து வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரினர்-ஐ தனது பெட்டியில் திரவ வடிவ போதைப்பொருளை வைத்திருந்ததாக கூறி அவரை ரஷ்ய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைதாகியுள்ள வீராங்கனை பிரிட்னி கிரினர் இரு முறை தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்க கூடைப்பந்து அணிகளில் இடம் பெற்றிருந்தவர் ஆவார்.
இந்த கைது நடவடிக்கை கடந்த மாதமே நடந்திருந்த நிலையில் அதை ரஷ்ய சுங்கத்துறை தற்போது அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து தங்கள் நாட்டு வீராங்கனையை மீட்பதற்காக சட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பிரிட்னி செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5ல் இருந்து 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.