உக்ரைனுக்கு ராணுவ உதவி: பிரித்தானிய அதிகாரிகள் 7 பேருக்கு ரஷ்யா தடை
Russia bans 7 Uk Defence Officials over Ukraine support: பிரித்தானியாவின் பாதுகாப்பு துறை அதிகாரி 7 பேருக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.
பிரித்தானிய அதிகாரிகளுக்கு தடை
உக்ரைனுக்கான ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருவதாக குற்றஞ்சாட்டி பிரித்தானிய பாதுகாப்பு துறையை சேர்ந்த 7 முக்கிய அதிகாரிகளுக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட 7 பிரித்தானிய அதிகாரிகளும் ரஷ்யாவிற்குள் நுழையது தடை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், BAE Systems, Malloy Aeronautics, Tekever UK, Rotron Aerospace மற்றும் MGI Engineering ஆகிய தாக்குதல் மற்றும் உளவு ட்ரோன் தயாரிப்பு நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளும் இந்த தடையில் சேர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் ரஷ்யாவின் ஆழமான நிலப்பரப்பில் உக்ரைனிய படைகள் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அதிக அளவில் வழங்குவது என்பது ரஷ்யாவிற்கு அதிகப்படியான ஆபத்தை விளைவிக்கும் நோக்கத்தை கொண்டதாகவே பார்க்கப்படும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் பிரித்தானியாவுக்கு பாதுகாப்பு ஆதாயம் கிடைப்பதாக கூறுவது என்பது உக்ரைன் மோதலை அவர்கள் சுயநலத்துடன் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பதை வெளிக்காட்டுகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.