எந்த நேரத்திலும் ரஷ்யா ஊடுருவலாம்... ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கையால் பெரும் பரபரப்பு
ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைன் நாட்டுக்குள் ஊடுருவலாம் என, அமெரிக்கா தனது ஐரோப்பிய கூட்டாளிகளை எச்சரித்துள்ள விடயம் உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பக்கம், போலந்து எல்லையில் பெலாரஸ் நாட்டவர்கள் கூடி, எல்லையில் அமைக்கப்பட்டுள்ள வேலியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயற்சிக்க, அவர்களை இராணுவம் தடுக்க, இதற்கிடையில் அப்படி எல்லையில் காத்திருந்த சிலர் பனியில் உறைந்து இறந்ததாக ஒரு செய்தி வெளியாக, உலகின் கவனம், குறிப்பாக நேட்டோ நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனம் முழுவதும் இந்த பிரச்சினையின் மீது இருக்கும் நிலையில், மறுபக்கம், ரஷ்யா உக்ரைன் நாட்டுக்குள் ஊடுருவ முயன்றுவருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
வெளியாகியுள்ள சேட்டிலைட் புகைப்படங்களும், Yelnya, Bryansk மற்றும் Kursk ஆகிய பகுதிகளில் ரஷ்ய இராணுவம் முகாமிட்டுள்ளதை உறுதி செய்துள்ளன.
அமெரிக்க உளவுத்துறை, தங்கள் ஐரோப்பியக் கூட்டாளிகளான நாடுகளிடம், ரஷ்யா 2014ஆம் ஆண்டில் கிரீமியா நாட்டைப் பிடித்துக்கொண்டதுபோல, தற்போது உக்ரைனையும் பிடித்துக்கொள்ள முயன்று வருவதைக் குறித்து எச்சரித்துள்ளது.
பல்லாயிரக்கணக்கான ரஷ்ய படையினர், டாங்குகள், இயந்திரத்துப்பாக்கிகள் பொருத்திய வாகனங்கள் ஆகியவற்றுடன் உக்ரைன் எல்லையில் குவிந்துள்ளதைத் தொடர்ந்து இந்த அச்சம் உருவாகியுள்ளது.
பதிலுக்கு உக்ரைனும் கூடுதலாக, 8,500 படையினரை எல்லையில் குவித்துள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.