ரஷ்யாவால் ஒருபோதும் உக்ரைனை கைப்பற்ற முடியாது... பிரித்தானிய இராணுவத் தலைவர்
உக்ரைனை ரஷ்யா ஊடுருவியது மிக மோசமான தவறு என்று கூறியுள்ள பிரித்தானிய இராணுவத் தலைவர், ரஷ்யாவால் ஒருபோதும் உக்ரைனை கைப்பற்ற முடியாது என்றும் கூறியுள்ளார்.
போர்த்திட்டங்களைப் பொருத்தவரை ரஷ்யா ஏற்கனவே தோற்றுவிட்டது என்று கூறும் பிரித்தானிய இராணுவ வீரர்களின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அட்மிரல் ரடாகின் (Admiral Sir Tony Radakin), ரஷ்யா பெரும் இழப்புக்களை சந்தித்து வரும் நிலையில், நேட்டோ அமைப்போ மேலும் வலுப்பெற்று வருகிறது, இப்போது கூடுதலாக பின்லாந்தும், ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணைய உள்ளன என்கிறார்.
புடின், வரும் வாரங்களில் சிறு சிறு வெற்றிகளை பெறலாம் என்று கூறும் அட்மிரல் ரடாகின், ஆனால், அவர் சிறிய இலாபங்களுக்காக தனது நாட்டின் இராணுவத்தில் கால் பகுதியை இழந்துவிட்டதுடன், ரஷ்யாவிடம் படைவீரர்கள் மற்றும் ஏவுகணைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்கிறார்.
உக்ரைனுடைய ஒரு சிறிய பகுதியைப் பிடிப்பதற்காக புடின் தனது இராணுவத்தின் வலிமையில் 25 சதவிகிதத்தை செலவிட்டுள்ளதுடன், அவரது படையில் சுமார் 50,000 பேர் ஒன்றில் இறந்துவிட்டார்கள் அல்லது காயமடைந்துள்ளார்கள் என்கிறார் அட்மிரல் ரடாகின்.
உக்ரைனியர்கள் தைரியசாலிகள் என்று கூறி அவர்களுக்கு தனது மரியாதையைத் தெரிவித்துக்கொண்டுள்ள அட்மிரல் ரடாகின், பிரித்தானியா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி தனது ஆதரவைத் தெரிவிக்கும் என்று உறுதி கூறியுள்ளார்.