நேட்டோ இனி வேடிக்கை பார்க்காது: ரஷ்யாவுக்கு ஜோ பைடன் கடும் எச்சரிக்கை
உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் நேட்டோ நாடுகள் வேடிக்கை பார்க்காது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தொடர்பில் ஜோ பைடன் குறிப்பிடவில்லை என்றே தெரிய வந்துள்ளது. ஐரோப்பாவில் தமது நட்பு நாடுகளின் தலைவர்களுடன் கலந்தாலோசனையில் பங்கேற்க சென்றுள்ள ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்யாவை காட்டமாக விமர்சித்துள்ளார்.
ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போலந்துக்கு செல்லவும் முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், விளாடிமிர் புடின் உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால், நேட்டோ நாடுகள் இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்குமா என்ற கேள்விக்கு, தேவையான நடவடிக்கைகளை நேட்டோ முன்னெடுக்கும் என்றார் ஜனாதிபதி ஜோ பைடன்.
மட்டுமின்றி, ரஷ்யா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தும் வாய்ப்பு அதிகமென மேற்கத்திய நாடுகளும் எச்சரிக்கை விடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் அது கண்டிப்பாக பேரழிவை ஏற்படுத்தும் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, ரஷ்யா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை முன்னெடுக்கும் பொருட்டு தேசிய பாதுகாப்பு குழு ஒன்றை வெள்ளைமாளிகை உருவாக்கியுள்ளது.
முன்னதாக ரஷ்யாவுடன் நேரடி இராணுவ மோதலுக்கு பயந்து அமெரிக்காவும் நேட்டோவும் உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்பாது என்று ஜோ பைடன் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.