எங்களுக்கும் அவரை பிடிக்காது... போரிஸ் ஜான்சன் ராஜினாமா குறித்து ரஷ்யா தெரிவித்துள்ள கருத்து
பிரித்தானிய அமைச்சர்கள் 50க்கும் மேற்பட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பிரதமர் போரிஸ் ஜான்சனும் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து ரஷ்யா தனது கருத்தை வெளியிட்டுள்ளது. கிரெம்ளின் வட்டாரம் வெளியிட்டுள்ள செய்தியில், பிரித்தானிய பிரதமருக்கு ரஷ்யாவைப் பிடிக்காது. அதேபோல ரஷ்யாவுக்கும் அவரைப் பிடிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் முன் பேசிய கிரெம்ளின் செய்தித்தொடர்பாளரான Dmitry Peskov: ‘அவருக்கு எங்களைப் பிடிக்காது, அதேபோல எங்களுக்கும் அவரைப் பிடிக்காது’ என்றார்.
போரிஸ் ஜான்சன் விரைவில் தனது பதவியை துறக்க இருப்பதாக வெளியான செய்திகளைக் குறித்து ரஷ்யாவுக்கு பெரிதாக எந்த அக்கறையும் இல்லை என்றார்.
பிரித்தானியாவில் தொழில்முறையாளர்கள் அதிகாரத்துக்கு வரவேண்டும் என தாங்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள கிரெம்ளின் வட்டாரம், என்றாவது ஒரு நாள் பேச்சுவார்த்தை மூலம் முடிவுகள் எடுக்கும் திறன்கொண்ட தொழில்முறையாளர்கள் அதிகாரத்துக்கு வரவேண்டும் என தாங்கள் விரும்புவதாகவும், ஆனால், இப்போதைக்கு அதற்கான நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து ரஷ்யா மீது பிரித்தானியா தடைகள் விதித்ததால், போரிஸ் ஜான்சன் ரஷ்யா செல்வதற்கு அந்நாடு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.