புதிதாக 3 மில்லியன் வீரர்களை ஒருங்கிணைக்கும் புடின்... எச்சரிக்கும் ஜேர்மனியின் மூத்த தளபதி
ஜேர்மனியின் இராணுவத் தளபதி ஒருவரின் கூற்றுப்படி, 2029 ஆம் ஆண்டிலேயே ரஷ்யா ஐரோப்பாவின் மீது பரவலான படையெடுப்பைத் தொடங்கக்கூடும்.
தயாராக இருக்க வேண்டும்
அடுத்த ஆண்டுக்குள் ரஷ்ய ஜனாதிபதி புடின் 3 மில்லியன் வலிமையான இராணுவத்தை ஒருங்கிணைத்திருப்பார் என்றும் அந்த இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போன்று பல நாடுகளை சின்னாபின்னமாக்கும் திட்டத்தை புடின் முன்னெடுப்பார் என்றும் பலர் அச்சம் தெரிவித்துள்ளனர். தளபதி Carsten Breuer தெரிவிக்கையில், ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்பார்த்து, நாடுகள் ஆயுதங்களுடன் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
2029 ஆம் ஆண்டுக்குள் ரஷ்யா, நேட்டோ பிரதேசத்தில் கூட பெரிய அளவிலான வழக்கமான தாக்குதலை நடத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், புடின் நேட்டோவை ஒரு கூட்டணியாக பலவீனப்படுத்தி அழித்து, நமது மேற்கத்திய சமூக வடிவத்தை இழிவுபடுத்த விரும்புகிறார் என்றும் தளபதி Breuer தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் இலக்கு 2029 என்றும், அதற்குள் நாம் எதையும் எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்றும் தளபதி Carsten Breuer தெரிவித்துள்ளார். முன்னதாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல் முறையாக லிதுவேனியாவிற்கு 5,000 வீரர்களை நிரந்தரமாக அனுப்புவதாக ஜேர்மனி கடந்த வாரம் அறிவித்தது.
இதனிடையே, ஜனாதிபதி புடின் தனது இராணுவத்தை விரிவுபடுத்தவும், அதிக எண்ணிக்கையில் இறந்து கொண்டிருக்கும் தனது துருப்புக்களை மாற்றவும் ஒரு பெரிய ஆட்சேர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்து வருகிறார்.
இராணுவ ஆட்சேர்ப்பு
கடந்த வாரம் தான் அவர் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட 160,000 ஆண்களை கட்டாய இராணுவத்தில் சேர்த்தார். இதனையடுத்தே, விளாடிமிர் புடினின் இந்த நகர்வு தெளிவான அச்சுறுத்தல் என தளபதி Carsten Breuer குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீது படையெடுப்பை முன்னெடுத்த போது இருந்த எண்ணிக்கையை விட தற்போது இருமடங்காக அதிகரிக்க செய்துள்ளார். இதனால் 3 மில்லியன் வீரர்கள் கொண்ட வலுவான இராணுவமாக இருக்கும் என்றே கூறுகின்றனர்.
இராணுவ வீரர்கள் மட்டுமின்றி, ஆண்டுக்கு 1500 இராணுவ டாங்கிகளை தயாரிக்கவும் புடின் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஐரோப்பா ஏற்கனவே ஒரு விரிவான போருக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.
கண்டம் முழுவதும், அரசாங்கங்கள் பாதுகாப்பு மற்றும் கட்டாய இராணுவ ஆட்சேர்ப்புக்கான திட்டமிடலுக்கு அதிக செலவு செய்கின்றன. பிரித்தானியாவும் மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு திட்டத்தை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
சில நாடுகள் தங்கள் குடிமக்கள் போரிலிருந்து மீள்வதற்காக உயிர்வாழும் வழிகாட்டிகளை கூட வெளியிட்டுள்ளன, பிரான்ஸ் இந்த நடவடிக்கையை சமீபத்தில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |