தாக்குதலை நிறுத்திய ரஷ்ய ராணுவம்: நகரை விட்டு வெளியேற தொடங்கிய மரியுபோல் மக்கள்!
உக்ரைனுக்கு எதிரான போரை மனிதாபிமத்தின் அடிப்படையில் தாற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்ததை தொடர்ந்து மரியுபோல் மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேற தொடங்கியுள்ளனர்.
ரஷ்யா-உக்ரைன் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைன் நகர்களான மரியுபோல் மற்றும் வோல்னோவாகா ஆகிய இரண்டு பகுதிகளிலும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் தற்காலிகமாக போரை நிறுத்தி உள்ளதாக ரஷ்யா தெரிவித்திருந்ததது.
இந்த அறிவிப்பானது, மரியுபோல் நகரின் மேயர் வாடிம் பாய்சென்கோ வெளியிட்ட குற்றசாட்டை தொடர்ந்து வெளிவந்துள்ளது.
அதில் ரஷ்யா ராணுவம் மரியுபோல் நகரை சுற்றிவளைத்து தொடர்ந்து ஷெல் தாக்குதலை நடத்திவருகிறது, இதனால் மின்சாரம், குடித்தண்ணீர் மற்றும் உணவு போன்ற அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் சீரழிக்கப்படுகிறார்கள்.
மேலும் ரஷ்யா ராணுவம் மரியுபோல் நகர மக்களை முழுவதுமாக இந்த உலகத்தில் இருந்து துடைத்து எடுக்க நினைக்கிறார்கள் என குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளிட்டுள்ள அறிவிப்பில், மரியுபோல் மற்றும் வோல்னோவாகா ஆகிய இரண்டு நகரங்களில் மனிதாபிமானத்தின் அடிப்படையில் அங்குள்ள பொதுமக்கள் அந்த நகரை விட்டு வெளியேற உதவும் விதமாக ரஷ்ய நேரப்படி காலை 10:00 மணி முதல் ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலை இப்பகுதிகளில் நிறுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது மரியுபோல் நகரத்தில் வசிக்கும் 2 லட்சம் மக்கள் அந்த பகுதியை விட்டு வெளியேற திட்டமிட்டு அவசர அவசரமாக வெளியேறிவருகின்றனர்.