உக்ரைனில் 100 பில்லியன் டொலர் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்திய ரஷ்யா
ரஷ்யப் படைகள் இதுவரை100 பில்லியன் டொலர் மதிப்பிலான உள்கட்டமைப்பை அழித்துவிட்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யப் படைகள் இதுவரையிலான தாக்குதலில் குறைந்தபட்சம் 100 பில்லியன் டொலர் மதிப்பிலான உள்கட்டமைப்பு, கட்டிடங்கள் மற்றும் பிற சொத்துக்களை அழித்துள்ளன என்று உக்ரைனின் உயர்மட்ட அரசாங்க பொருளாதார ஆலோசகர் ஒலெக் உஸ்டென்கோ வியாழக்கிழமை தெரிவித்தார்.
பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் எகனாமிக்ஸ் நடத்திய ஒன்லைன் நிகழ்வில், உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் உஸ்டென்கோ, படையெடுப்பு 50 சதவீத உக்ரேனிய வணிகங்களை முற்றிலுமாக மூடிவிட்டதாகக் கூறினார். மீதமுள்ளவை குறைந்த திறனில் இயங்குகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
சேத மதிப்பீடு "மிகவும் தோராயமானது" மற்றும் பாலங்கள், மருத்துவமனைகள், சாலைகள், உபகரணங்கள் மற்றும் பிற சொத்துக்களை உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.
சேதமைடைந்த உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் முயற்சிகளுக்கு தேவையான நிதியில் ஒரு பகுதியை, உலகம் முழுவதும் முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களிலிருந்து பெறலாம் என்று உஸ்டென்கோ கூறியுள்ளார்.
நாட்டிற்கு வெளியே வைத்திருக்கும் ரஷ்ய மத்திய வங்கி சொத்துக்கள் மற்றும் மேற்கத்திய பொருளாதாரத் தடைகளால் முடக்கப்பட்ட அசையாத சொத்துக்களும் இதில் அடங்கும்.
உக்ரைனின் நிதி கையிருப்பு தற்போது சுமார் 27.5 பில்லியன் டொலராக உள்ளது. இது ரஷ்ய படையெடுப்பிற்கு முன் 30 பில்லியன் டொலராக இருந்தது என்று உஸ்டென்கோ கூறினார்.