அமெரிக்க உறவுகளை புதுப்பிக்க... இரண்டு பிரித்தானியத் தூதர்களை வெளியேற்றிய ரஷ்யா
நாட்டில் உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டி இரண்டு பிரித்தானியத் தூதர்களை நாட்டை விட்டு வெளியேற ரஷ்யா இரண்டு வார கால அவகாசம் அளித்துள்ளது.
ரஷ்யா உடனான நெருக்கம்
ட்ரம்ப் நிர்வாகத்துடன் உறவுகளை மீட்டெடுக்க பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில் ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் பிரித்தானிய அதிகாரிகள் தரப்பில் பதிலளிக்கப்படவில்லை என்றாலும், இதற்கு முன்னரும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பிரித்தானியா நிராகரித்துள்ளது.
ரஷ்யாவும் அமெரிக்காவும் தங்கள் தூதரகங்களில் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், ரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்படவிருக்கும் முதல் மேற்கத்திய தூதர்கள் இவர்கள் என்று கூறப்படுகிறது.
மட்டுமின்றி, ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்புக்கு வந்ததன் பின்னர் ரஷ்யா உடனான நெருக்கத்தின் ஒருபகுதியாகவும் இதை சுட்டிக்காட்டுகின்றனர். ட்ரம்பின் சமீபத்திய ரஷ்ய நெருக்கம் ஐரோப்பிய நாடுகளை முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் தள்ளியுள்ளது.
இதேபோன்ற வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கு நாடுகளில் உள்ள ரஷ்ய தூதரகங்களின் செயல்பாட்டை கடுமையாகக் குறைத்துள்ளன. 2022 ல் ரஷ்யா உக்ரைன் மீது முழு வீச்சில் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவில் மேற்கத்திய நாடுகளின் தூதரக பணிகளும் குறைக்கப்பட்டன.
கெய்ர் ஸ்டார்மரின் கருத்து
பிரித்தானியாவின் இரு தூதரக அதிகாரிகளும் போலியான தகவல்களை சமர்ப்பித்து அனுமதி பெற்றுள்ளதாகவே ரஷ்ய பாதுகாப்பு சேவை அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இருவரும் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் ரஷ்ய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், வெளியேற்றப்படுவது தொடர்பாக விவாதிக்க ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் பிரித்தானிய தூதரகத்தின் பிரதிநிதியை நேரிடையாக வரவழைத்திருந்தது.
உக்ரைன் இராணுவத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதும், பிரித்தானிய இராணுவம் உக்ரைனில் களமிறங்கக் கூடும் என்ற பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் கருத்தும் உக்ரைனில் வான் பாதுகாப்பை உறுதி செய்ய ஐரோப்பிய நாடுகளின் திட்டமும் ரஷ்யாவை கொந்தளிக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |