எரிபொருள் ஏற்றுமதிக்கான தடையை நீட்டித்த ரஷ்யா: அறிவிக்கப்பட்ட சில முக்கிய தளர்வுகள்
உள்நாட்டு விநியோக சந்தையை பாதுகாக்க எரிபொருள் ஏற்றுமதிக்கான தடையை ரஷ்யா நீட்டித்துள்ளது.
அடுத்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்ட எரிபொருள் ஏற்றுமதி
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை மற்றும் பொருளாதார தடைகள் காரணமாக ரஷ்யாவில் வழக்கத்திற்கு மாறாக எரிபொருள் விநியோகம் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் உள்நாட்டு எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்தும் விதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருள்களுக்கு ரஷ்ய அரசு அதிகாரப்பூர்வமாக தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக வியாழக்கிழமை வெளியான அறிவிப்பில், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் ஏற்றுமதிக்கான தடை 2027ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி வரை அமுலில் இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் அறிவிக்கப்பட்ட எரிபொருள் ஏற்றுமதி தடை ஜூலை மாத இறுதியுடன் நிறைவடையும் நிலையில், தற்போது எரிபொருள் ஏற்றுமதிக்கான தடை 2027 ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் உள்நாட்டு சந்தை நிலவரம் சீரடைந்த பிறகே எரிபொருள் ஏற்றுமதி மீதான தடை தளர்த்தப்படும் என்று ரஷ்ய துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் ஏற்றுமதியில் சில முக்கிய தளர்வுகள்
அறிவிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஏற்றுமதி தடையில் சில முக்கிய விதிவிலக்குகளும் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேரடியாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் எரிபொருள் ஏற்றுமதி மீதான தடை செப்டம்பர் 1, 2026 வரை மட்டுமே அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைப்போல நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ஒப்பந்தங்களில் கீழ் எரிபொருள் ஏற்றுமதிக்கு அனுமதி உண்டு.
மேலும் மனிதாபிமான நோக்கில் வழங்கப்படும் உதவிகளுக்கு அரசு ஒப்புதலுடன் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.