போர் நிறுத்தம்... இல்லை என்றால் ரஷ்யா மீது உக்கிர நடவடிக்கை: தயாராகும் ஐரோப்பா
அமெரிக்கா விரும்பினாலும் இல்லை என்றாலும், ரஷ்யாவிற்கு எதிராக உக்கிர நடவடிக்கை எடுக்க ஐரோப்பிய தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய தடைகளை விதிக்கும்
துருக்கியில் முன்னெடுக்கப்படும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றால், தீவிர நடவடிக்கை உறுதி என்றே ஐரோப்பிய தலைவர்கள் கூறியுள்ளனர்.
30 நாள் போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா உடன்படவில்லை என்றால் ஐரோப்பா புதிய தடைகளை விதிக்கும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் உண்மையான முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால், ரஷ்யா புதிய ஐரோப்பிய நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ஜேர்மன் சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸ் செவ்வாயன்று எச்சரிக்கை விடுத்தார்.
அத்துடன் ரஷ்ய ஜனாதிபதி புடினை உக்ரைன் தலைவர் ஜெலென்ஸ்கியை சந்திக்குமாறும் அவர் வலியுறுத்தினார். பிப்ரவரி 2022 ல் விளாடிமிர் புடின் உக்ரைனை ஆக்கிரமித்ததிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது ஏற்கனவே 16 சுற்று தடைகளை விதித்துள்ளது.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை மாலை வரை, இரு ஜனாதிபதிகளும் நேரில் சந்திக்க வேண்டும் என்ற உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் சவாலை விளாடிமிர் புடின் ஏற்றுக்கொள்வாரா என்பதில் உறுதியான தகவல் எதுவும் வெளிவரவில்லை.
துருக்கிய தலைநகரான அங்காராவிற்கு அதன் தலைவர் தையிப் எர்டோகனை சந்திக்க ஜெலென்ஸ்கி பயணம் மேற்கொள்ளவிருக்கிறார், மேலும் புடின் இந்த சந்திப்புக்கு வந்தால் இஸ்தான்புல்லுக்கு செல்வேன் என்றும் எர்டோகன் கூறியுள்ளார்.
உலகப் போரை விரும்பவில்லை
புடின் வந்து பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை என்றால், அவர் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்பவில்லை என முடிவு செய்யப்படும் என்றே ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இஸ்தான்புல் சந்திப்பிற்கு புடின் தயார் என்றால், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள துருக்கி செல்ல தயாராக இருப்பதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், புடின் இஸ்தான்புல் புறப்பட பிரேசில் உதவ முன்வர வேண்டும் என உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் Andrii Sybiha அழைப்பு விடுத்துள்ளார். பிரிக்ஸ் அமைப்பில் சீனாவும் பிரேசிலும் ரஷ்யாவுடன் இணைந்து செயல்படுவதால் இந்த கோரிக்கை வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, 2014 முதல் ரஷ்யாவால் வலுக்கட்டாயமாக கைப்பற்றப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் உக்ரைன் திரும்பப் பெற முடியாது என்பதை ஜெலென்ஸ்கி ஒப்புக்கொண்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேற்கு நாடுகள் மூன்றாம் உலகப் போரை விரும்பவில்லை என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |