இன்னுமொரு போருக்கு தயாராகும் ரஷ்யா... எச்சரிக்கை விடுத்துள்ள ஐரோப்பிய உளவு முகமை
உக்ரைன் மீதான தனது படையெடுப்பை முடித்துக்கொண்ட ஓராண்டு காலத்திற்குள்ளாகவே தாக்குதல் நடத்தத் தயாராகும் வகையில், நேட்டோவை ஒரு போரில் எதிர்கொள்ள ரஷ்யா தயாராகி வருவதாக ஐரோப்பிய உளவு முகமை ஒன்று எச்சரித்துள்ளது.
தயாராகி வருகிறது
நெதர்லாந்தின் உளவு முகமையான MIVD தயாரித்துள்ள ஆய்வறிக்கையில், ரஷ்யா இன்னமும் ஐரோப்பியக் கண்டத்திற்கு மிகப்பெரிய மற்றும் நேரடியான அச்சுறுத்தலாக விளங்குகிறது என்றும், நேட்டோவுடன் ஒரு சாத்தியமான மோதலுக்கு ஏற்கனவே தயாராகி வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், உக்ரைனுடன் இன்னும் போரிட்டுக்கொண்டிருக்கும் நிலையில், ரஷ்யா மற்றொரு போரைத் தொடங்குவது தற்போதைக்கு சாத்தியமல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், சீனாவுடனான தனது உறவுகள் மேலும் ஆழமடைந்து வருவதால் ரஷ்யா ஊக்கம் பெற்று வருகிறது என்றும் MIVD தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், சீனாவின் இணைய உளவுத் திறன்கள் தற்போது அமெரிக்காவிற்கு இணையான நிலையில் உள்ளன என்றும் MIVD குறிப்பிட்டுள்ளது. சீனாவின் இணையச் செயல்பாடுகள் மிகுந்த திறன்கொண்டவை; மேலும், அவை மிகவும் சிக்கலான முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளன என்று MIVD-ன் தலைவர் துணை அட்மிரல் பீட்டர் ரீசிங்க் குறிப்பிட்டுள்ளார்.

பெரும் அபாயத்தில்
மேலும், சீனா உருவாக்கும் அச்சுறுத்தல்களை நம்மால் எப்போதும் எதிர்கொள்ள முடிவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சீனாவுடனான தனது உறவுகள் வலுப்பெற்று வருவதன் விளைவாக, மேற்கத்திய நாடுகளில் உள்ள இராணுவ மற்றும் பொதுமக்கள் இலக்குகளைத் தாக்கும் தனது திறனில் ரஷ்யாவுக்கு நம்பிக்கை அதிகரித்து வருவதாக MIVD தெரிவித்துள்ளது.

தனது ஆயுதத் தொழிலுக்கு ஆதரவளிக்கும் சீன ஏற்றுமதிகளிலிருந்து பயனடைய ரஷ்யா ஆர்வமாக உள்ள நிலையில், உக்ரைனில் ரஷ்யாவின் போர்க்கால அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள சீனா விரும்புகிறது என்பதையும் MIVD தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, மேற்கத்திய நாடுகளுக்கு இடையேயான சீர்குலைந்த உறவுகள் ஐரோப்பாவை ஒரு பெரும் அபாயத்தில் ஆழ்த்தியுள்ளதாக MIVD தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதுடன், விதிகள் புறக்கணிக்கப்பட்டு அதிகாரம் தீர்மானிக்கும் காரணியாக மாறும் இடங்களில் இந்த அபாயம் அதிகமாகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |