நாளை சூரிய உதயத்திற்கு முன்... உக்ரேனிய மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ரஷ்யா
ஆயுதங்களை கைவிட்டு சரணடைய உக்ரைனின் மரியுபோல் நகர மக்கள் மற்றும் துருப்புகளுக்கு மார்ச் 21 அதிகாலை வரை ரஷ்யா அவகாசம் அளித்துள்ள தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய நேரப்படி அதிகாலை 5 மணிவரையில் அவர்களுக்கு கால அவகாசம் இருப்பதாகவும், அதற்குள் அவர்கள் பதிலளிக்க வேண்டும் எனவும் ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் கர்னல் ஜெனரல் மிகைல் மிஜின்ட்சேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ரஷ்ய துருப்புகளால் முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகரம் தொடர்பில் உக்ரைன் நிர்வாகம் எழுத்துப்பூர்வ பதில் அளிக்க வேண்டும் எனவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
ஆயுதங்களை கைவிட்டால் மட்டுமே, தற்போது மரியுபோல் நகரில் சிக்கியுள்ள பொதுமக்கள் வெளியேற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஜெனரல் மிஜின்ட்சேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், ஆயுதங்களை கைவிட மற்றும் எதிவினையாற்றுவோருக்கு என்ன நேரும் என்பதை ரஷ்யா தெளிவு படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது. மரியுபோல் நகரில் அப்பாவி பொதுமக்களை ரஷ்ய துருப்புகள் கேடயமாக பயன்படுத்தி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
உண்மையில், ரஷ்ய துருப்புகளின் தொடர் தாக்குதல் காரணமாகவே அப்பாவி மக்கள் வெளியேற முடியாமல் மரியுபோல் நகரில் பதுங்கு குழிகளில் சிக்கியுள்ளனர்.
மட்டுமின்றி, மரியுபோல் நகர மக்களுக்கு அவர்களின் விசுவாசம் யாருடன் உள்ளது என்பதைத் தீர்மானிக்கவும் ஜெனரல் மிஜின்ட்சேவ் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், மரியுபோல் நகர நிர்வாகிகள் உறுதியான முடிவெடுக்க வேண்டும் எனவும் அல்லது இராணுவ விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்.
கடந்த மூன்று வாரங்களாக கிழக்கு துறைமுகமான மரியுபோல் நகரம் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. மரியுபோல் நகரை கைப்பற்றுவதால், உக்ரைனுக்கு மேலதிக நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என ரஷ்யா நம்புகிறது.
இந்த நிலையில், மரியுபோல் நகர முற்றுகை என்பது எதிர்வரும் நூற்றாண்டுகளுக்கு நினைவுகூரப்படும் ஒரு பயங்கரவாதம் என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சனிக்கிழமை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.