ரஷ்யாவுக்கு அங்கே இடமில்லை... ஐரோப்பிய ஒன்றியம் கிடுக்குப்பிடி
சிரியாவின் எதிர்காலம் தொடர்பில் முடிவு செய்வதில் இனி ரஷ்யாவுக்கு பங்கில்லை என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரத் தலைவர் Kaja Kallas தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு இனி பங்கில்லை
சிரியாவின் புதிய நிர்வாகத்தின் இந்த விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தங்கள் கருத்தை வலுவுடன் பதிவு செய்யும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
சிரியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி பஷர் அல்-அசாதை ஈரானுடன் இணைந்து ரஷ்யா ஆதரித்து வந்துள்ளது. சிரியாவில் வெடித்த உள்நாட்டுப் போரின் போது இந்த இரு நாடுகளுமே அசாத் இராணுவத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் முன்னெடுத்தது.
மட்டுமின்றி, ரஷ்யாவும் அதன் வாக்னர் படையும் போரிலும் களமிறங்கியிருந்தனர். தற்போது கிளர்ச்சியாளர்களால் அசாத் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், சிரியாவின் எதிர்காலத்தை முடிவு செய்யும் இடத்தில் ரஷ்யா மற்றும் ஈரான் இல்லை என Kallas தெரிவித்துள்ளார்.
இதே கருத்தையே ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் பதிவு செய்துள்ளதாக Kallas குறிப்பிட்டுள்ளார். சிரியாவின் புதிய தலைமை இனி ரஷ்யாவின் சகவாசத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிரியாவில் கடற்படை மற்றும் விமானப்படை என இரண்டு முதன்மையான தளங்களை ரஷ்யா அமைத்திருந்தது. இதனால் ரஷ்யாவின் விருப்பங்கள் சிரியாவில் நிறைவேற்றப்பட்டு வந்தன. அங்கிருந்தே ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அண்டை நாடுகளுடனான நடவடிக்கைகளை ரஷ்யா செயற்படுத்தி வந்துள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தலாக
இது கண்டிப்பாக ஐரொப்பிய நாடுகளுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதுவதாக Kallas குறிப்பிட்டுள்ளார். சிரியாவின் புதிய நிர்வாகத்திடம் இந்த விவகாரம் குறித்து விவாதிப்போம் என்றும் Kallas தெரிவித்துள்ளார்.
மேலும், சிரியாவின் புதிய நிர்வாகிகளுடன் எவ்வாறு ஈடுபடுவது என்று ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, சிரியாவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட இராஜதந்திரி திங்களன்று டமாஸ்கஸுக்குச் சென்று புதிய நிர்வாகிகளுடன் தனது முதல் சந்திப்புகளை நடத்தியுள்ளார்.
சிரியாவை தற்போது கைப்பற்றியுள்ள Hayat Tahrir al-Sham குழுவினருக்கு அல்-கொய்தா அமைப்புடன் தொடர்பிருப்பதால் மேற்கத்திய நாடுகள் சந்தேகத்துடனே அணுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |